தமிழ் சினிமாவில் ஒரு தலை சிறந்த நடிகராக கருதப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எப்படியாவது சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எத்தனையோ பிரபலங்கள் உள்ளனர். ஆனால் சிவாஜியே உன் கூட ஒரு படத்தில் எப்படியாவது நடிச்சிடனும்னு ஒரு நடிகையிடம் சொல்லி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஒரு விஷயம்?
அந்த நடிகை யார்? ஏன் அப்படி சொன்னார் என்பதை பற்றி இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக திகழ்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில் தொடங்கி படையப்பா வரை அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் எண்ணற்றவை. அவருடைய வசனங்களில் இருந்து அவருடைய நடிப்பு, நடை என ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக இருந்தார்.
திரும்பினால் நடந்தால் ஸ்டைல், பேசினால் ஸ்டைல், சிரித்தால் ஸ்டைல் என எல்லாவற்றிலும் ஒரு வித ஸ்டைலையும் கொண்டு வருவார் சிவாஜி. வீர வசனம் பேசுவதில் இவரை அடித்துக் கொள்ள எந்த நடிகரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவருடன் நடிக்க பயந்தவர்கள் ஏராளமான பேர். எப்பேர்ப்பட்ட நடிகர் அவருடன் எப்படி நடிப்பது என எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் தயங்கி இருக்கின்றனர்.

நாடக மேடையில் இருந்து தொடங்கிய தன்னுடைய கலைப் பயணத்தை 60 வருடங்களுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டார். அவருடைய அனுபவம் என்பது மிகப்பெரியது. ஆனாலும் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே படத்தில் வெளிப்படுத்துவார். இப்படிப்பட்ட சிவாஜிக்கு இப்படி ஒரு ஆசையா என்று தான் நினைக்க தோன்றும். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை சுகன்யா.
பிரபுவுடன் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் சுகன்யாவின் படங்களை பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினாராம் சிவாஜி. ஒரு சமயம் சிவாஜிக்கு சிங்கப்பூரில் விழா எடுத்து கொண்டாடி இருக்கிறார்கள். அதில் சௌகார் ஜானகி, சரோஜாதேவி, வைரமுத்து, சரத்குமார், சுகன்யா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது சுகன்யாவிடம் சிவாஜி என் அருமை கண்மணி சுகன்யா.. உன்னுடன் ஒரு படத்திலாவது நான் நடிக்கணும் என சொன்னாராம். இதை இரண்டு முறை சொல்லி இருக்கிறார். சிவாஜி அப்படி சொன்னதும் நான் அப்படியே வானில் மிதந்தது போல இருந்தது. அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் என ஒரு பேட்டியில் சுகன்யா கூறியுள்ளார்.
