சிவாஜி கணேசன் நிஜப்பெயர் என்ன தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி...
கோலிவுட்டின் நடிப்பு திலகம் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் குறித்த சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளலாமா! தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில் அவரின் அந்த கோர்ட் சீனை இன்று பார்த்தால் கூட பலருக்கு சிலிர்க்க துவங்கி விடும்.
சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி என்பதே இவரின் உண்மையான பெயர். நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக பெற்றோருக்கு தெரியாமல் தனது ஏழு வயதில் திருச்சிக்கு வந்திருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கிருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். நாடக குழுவில் தொடர்ந்து இயங்கிய சிவாஜி சத்ரபதி சிவாஜி வேடத்தினை தான் அதிகம் போடுவாராம். இதனால் அவரது நண்பர்கள் சிவாஜி என்றே அழைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், 1946ம் ஆண்டு நடந்த திராவிட கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகம் நடைபெற்றது. அதில் சிவாஜியாக நடித்த இவரின் நடிப்பை கண்டு பலரும் சிலிர்த்து விட்டனர். தொடர்ந்து அண்ணா இவரை ‘சிவாஜி’ கணேசன் எனப் புகழ்பாடினார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.