“சத்யராஜ்ஜை வில்லனா போடுங்க”… ஹிட் படத்துக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்… கும்பிடு போட்ட இயக்குனர்…
கடின உழைப்பும் திறமையும் இருந்தால் வானத்தையே எட்டிவிடலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக உயர்ந்திருக்கும் இவரின் வளர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.
சினிமாவுக்குள் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் “மெரினா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோதே அவருக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இதனை தொடர்ந்து அவர் சினிமாவுக்குள் நுழைந்தபோது ரசிகர் வட்டம் கூடியது.
ஹீரோவோட ஃப்ரண்டு நான்தான்
இயக்குனரும் நடிகருமான மனோபாலா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் பேசியபோது “சிவகார்த்திகேயனை நான் முதன்முதலில் சந்தித்தபோது, அவருக்கு ஹீரோ ரோலில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. ஹீரோவுக்கு நண்பனாக நடித்தாலே போதும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது” என கூறினார். இவ்வாறு “3” திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்தார்.
மாஸ் ஹீரோ
“3” திரைப்படத்தை தொடர்ந்து “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” போன்ற பல திரைப்படங்களில் நடித்து பெருவாரியான இளைஞர்களை ஈர்த்தார். அதன் பின் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வெற்றி கதாநாயகனாக உயர்ந்தார். தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
ஜிகர்தண்டா
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஜிகர்தண்டா’. இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவின் டெரரான நடிப்பு பலரையும் “ஓ” போட வைத்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் பாபி சிம்ஹா.
ஜிகர்தண்டாக்கு ‘நோ’ சொன்ன சிவகார்த்திகேயன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா” திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது “ஜிகர்தண்டா திரைப்படத்தில் சித்தார்த் நடித்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் சிவகார்த்திகேயனைத்தான் அணுகினோம். அப்போது அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சேரில் இருந்து கீழே விழுந்த ஜெய்சங்கர்… “இது எதிராளியின் சதி”… எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!!
நாங்கள் ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதையை கூறியபோது, இதில் பாபி சிம்ஹாவுக்கு பதிலாக சத்யராஜ் போன்ற நடிகரை தேர்வு செய்தால் நன்றாக இருக்குமே என கூறினார். ஆனால் நான் ஏற்கனவே அந்த கதாப்பாத்திரத்திற்கு பாபி சிம்ஹாவை நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். இதனை சிவகார்த்திகேயனிடம் கூறியபோது அவர் பாபி சிம்ஹாவிற்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைத்தால் நிச்சயமாக நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு பாபி சிம்ஹாவை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. ஆதலால் சிவகார்த்திகேயன் அதில் நடிக்கவில்லை” என கூறினார்.
பிரின்ஸ்
சிவகார்த்திகேயனும் சத்யராஜ்ஜும் இணைந்து நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருந்த நிலையில் அத்திரைப்படத்தை பெருவாரியான ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.