அந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டவே வேண்டாம்.... சிவகார்த்திகேயன் ஓபன் டாக்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். பல வெற்றி படங்களை வழங்கிய சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுதவிர டான், அயலான், சிங்கப்பாதை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சில புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம்.
அதை திரும்ப எடுக்கவே முடியாது. ரெமோ படத்தைத் தொடர முடியாது. ஆனால், அந்த நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் வேறொரு படம் எடுக்கலாம்" என கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறியது போலவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இரண்டாம் பாகம் வராமல் இருப்பதே நல்லது தான்.
கடந்த 2013ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.