“சிவகார்த்திகேயன் தன்னை ரஜினின்னு நினைச்சிக்கிறார்… ஆனா??”… வெளுத்து வாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பிரின்ஸ்”. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு “பிரின்ஸ்” திரைப்படத்திற்கும் இருந்தது.
ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு மிகவும் சுமாரான விமர்சனங்களே வந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் பூர்த்தி செய்யவில்லை என பலரும் கூறி வந்தனர். குறிப்பாக திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள் என விமர்சகர்கள் கூறிவந்தனர்.
“பிரின்ஸ்” திரைப்படத்தை அனுதீப் கே.வி. இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற திரைப்படத்தை இயக்கியவர். “ஜதி ரத்னலு” திரைப்படம் ரூ.4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.60 கோடி வசூல் ஆனது. இந்த வெற்றியை தொடர்ந்துதான் சிவகார்த்திகேயன் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக வந்தது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூத்த பத்திரிக்கையாளரும் திரைப்பட விமர்சகருமான பிஸ்மி, ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதாவது “சிவகார்த்திகேயன் எப்படி சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம் என்பதில்தான் கவனமாக இருக்கிறார். தொடக்கத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். அதன் பின் இவரது நண்பர் ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயனை ஸ்டாராக உருவாக்கினார்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு அவரின் திறமையும் உழைப்பும் எவ்வளவு காரணமாக அதே போல் அவரின் வளர்ச்சிக்கு ஆர்.டி.ராஜாவும் காரணம். எந்த பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நேரம் பார்த்துதான் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரைப்படங்களை வெளியிடுவார். அதே போல் தொடர் விடுமுறை தினத்தில்தான் தன்னுடைய திரைப்படங்களை வெளியிடுவார். இப்படி சிவகார்த்திகேயனுக்கு பில்ட் அப் கொடுத்ததே ஆர்.டி.ராஜாதான்.
ஆனால் இப்போது ஆர்.டி.ராஜாவை சிவகார்த்திகேயன் தள்ளி வைத்துவிட்டார். எனினும் சிவகார்த்திகேயன் வளர்ச்சி இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் இந்த வியாபார தந்திரத்தை விஜய்யை பார்த்து செய்யவில்லை. விஜய் மாதிரி தான் வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் ஆசைப்படவில்லை. தன்னை அவர் ரஜினியாகவே நினைத்துக்கொண்டார்” என விமர்சித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “பிரின்ஸ்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் “மாவீரன்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.