ரஜினிக்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்... அட இது செம கூட்டணி....
முன்பெல்லாம் பாடலாசிரியர்கள் மட்டுமே பாடல் எழுதுவார்கள். பின்னர் சில இயக்குனர்கள் பாடல்களை எழுத துவங்கினர். கடந்த சில வருடங்களாக நடிகர்களும் பாட்டெழுத துவங்கி விட்டனர். சிம்பு, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் பாடலை எழுதி வருகிறார்.
அவர் எழுதிய சில பாடல்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பாடல்களை எழுத துவங்கிவிட்டார். அவர் நடித்த டாக்டர் படத்தில் அவர் எழுதிய ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் அதிரி புதிரி ஹிட் ஆனது. எனவே, மற்ற நடிகர்கள் படத்திற்கும் அவரை பாடல் எழுத அழைக்கின்றனர்.
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் கூட அரபிக்குத்து எனும் புதிய ஸ்டைலில் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் வரி வீடியோ சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த பாடல் வீடியோவை யுடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதுதான் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.
இந்நிலையில், ரஜினிக்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதவுள்ளார். அண்ணாத்த படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பாடலை உருவாக்கும் பணியிலும் நெல்சன் மற்றும் அனிருத் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, இவர்கள் 2 பேர் காம்பினேஷனில் உருவான டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ள நிலையில், ரஜினி படத்திலும் அறிமுகபாடலை அவர் எழுதவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
சிவகார்த்திகேயன் பாடல் எழுத வாங்கும் சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.