பிளாக் பஸ்டர் படம் கொடுத்தும் ஆயிரக்கணக்கில்தான் சம்பளம்… சிவக்குமார் கூறிய வியக்கவைத்த காரணம்…
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த சிவக்குமார், குறிப்பிடத்தக்க பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாத் துறையில் சிவக்குமாருக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது.
சிவக்குமார் நல்ல நடிகர் மட்டுமல்லாது நல்ல பேச்சாளரும் கூட. குறிப்பாக மகாபாரத ராமாயணக்கதைகளை பல மணிநேரம் மனப்பாடமாக பேசக்கூடிய திறன் படைத்தவர்.
சிவக்குமார் நடிப்பில் வெளிவந்த “அன்னக்கிளி”, “ஆட்டுக்கார அலமேலு”, “பத்ரகாளி” போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. இத்திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த சிவக்குமார், அக்காலகட்டத்தில் வெறும் ரூ.25,000 மட்டுமே சம்பளமாக பெற்று வந்தாராம்.
அப்போது ஒரு முறை சாண்ட்டோ சின்னப்பா தேவர் சிவக்குமாரை ஒரு புதிய திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய வந்தார். அப்போதும் சிவக்குமார் ரூ. 25,000 மட்டுமே சம்பளமாக கேட்டிருக்கிறார். அதற்கு சின்னப்பத்தேவர் “மூன்று வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தும் இன்னமும் அதே இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம்தானா?” என கேட்டாராம்.
அதற்கு சிவக்குமார் “அன்னக்கிளி திரைப்படம் வெற்றிப்பெற்றது அந்த ‘அன்னத்துக்காக’. பத்ரகாளி வெற்றி பெற்றதற்கு காரணம் அத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ராணி சந்திரா. அதே போல் ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் வெற்றி பெற்றதற்கு அந்த படத்தில் நடித்த ஆடுதான் காரணம். இதில் நான் எப்படி சம்பளத்தை உயர்த்த முடியும்” என விளக்கம் அளித்தாராம். அதன் பின் தனது 125 ஆவது திரைப்படத்தில்தான் சிவக்குமார் ஒரு லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினாராம்.