கடந்த 10 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மாணவர்கள் போராட்டத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவமாக இந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பார்க்கப்படுகிறது. வரலாற்றை நன்கு கரைத்து குடித்தவர்களுக்குத்தான் இதன் வலி, தாக்கம் எல்லாம் புரியும். இன்றைய தலைமுறையினருக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஒன்னும் இல்லாததற்கு எல்லாம் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மத்தியில் இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழுக்காக இவ்வளவு பேர் உயிரிழந்திருக்கிறார்களா? தமிழை இந்தளவு நேசித்திருக்கிறார்களா? என்று இந்தப் படம் பார்க்கும் போது நமக்கு ஒரு ஆழமான உணர்வை ஏற்படுத்துகிறது. சமீபத்தில்தான் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு கூட்டத்தை படக்குழு நடத்தியது. இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்ல பொங்கல் விழா டெல்லியில் மோடி தலைமையில் நடந்தது.
இந்த விழாவிற்கு பாஜக கட்சியினரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூடவே பராசக்தி படக்குழுவும் கலந்து கொண்டனர். ரவிமோகன், கெனிஷா, சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி, ஜிவி பிரகாஷ் என முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜிவி இசையில் ஒரு கச்சேரியும் நடந்தது. அதை மோடி மிகவும் ரசித்து கேட்டார்.
இதில் சிவகார்த்திகேயனிடம் பராசக்தி படம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதாவது பராசக்தி சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது பராசக்தி படத்தில் சர்ச்சை எதுவும் இல்லை. அதே நேரம் அதை பற்றி பிரச்சாரம் செய்யவும் நான் விரும்பவில்லை. மக்கள் பராசக்தி படத்தை சரியான வகையில் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.