ஒரு படத்துக்காக இரண்டு முறை கைதான எஸ்.ஜே.சூர்யா!.. மனுசன் நிலைமை ஐயோ பாவம்!..
சில திரைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். சில சமயம் இதுவே படத்திற்கு விளம்பரமாகவும் அமைந்துவிடும். இப்படி சர்ச்சையில் சிக்கிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதுண்டு.
ஆனால், ஒரு திரைப்படத்திற்காக ஒரு இயக்குனர் இரண்டு முறை கைது செய்யப்பட்டார் எனில் அது எஸ்.ஜே.சூர்யாதான். கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து போராடி வாலி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் இவர். இவர் படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. எனவே, காஜி ரசிகர்களுக்கு இவர் படம் என்றால் கொள்ளை இஷ்டம்.
அப்படித்தான் பல காட்சிகளை தான் இயக்கும் படங்களில் வைத்திருப்பார். விஜயை வைத்து இவர் இயக்கிய குஷி படமும் மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பின் சில படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வரும் பிஸியான நடிகராக மாறிவிட்டார்.
இவர் இயக்கி நடித்த திரைப்படம்தான் நியூ. இப்படத்தில் 10 வயது சிறுவன் பெரிய வாலிபனாக மாறுவது போல் சயின்ஸ் பிக்ஷன் கதையை அமைத்திருப்பார். அடல்ட் காமெடி வகையை சேர்ந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
பக்கத்துவீட்டில் இருக்கும் நடிகை கிரணோடு ஆட்டம் போடுவது போலவும் காட்சிகளை அமைத்திருப்பார். அதோடு, கிரணுக்காக ‘கும்பகோணம் சந்தையில’ என ஒரு கிளுகிளுப்பு பாடலையும் வைத்திருந்தார். ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறக்கூடாது என தணிக்கை சான்றிதழ் அதிகாரி ஒருவர் கூற, கோபத்தில் போனை அவர் மீது ஏறிந்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
2004ம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியானது. 2005ம் ஆண்டு அந்த தணிக்கை சான்றிதழ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா மீது அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். அதேபோல், 2006ம் ஆண்டும் அதே அதிகாரி எஸ்.ஜே.சூர்யா மீது மற்றொரு புகாரை கொடுத்தார். தணிக்கை குழு நிராகரித்த அந்த பாடலை எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தினார் என்பதுதான் அந்த புகார். அதிலும், எஸ்.ஜே.சூர்யா கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். மேலும், இவருக்கும் சிம்ரனுக்கும் நெருக்கமான காட்சி ஒன்று போஸ்டராக சென்னையின் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த மக்கள் பலர் முகம் சுழிக்க உடனே வழக்கும் போடப்பட்டது.
திரையுலகில் ஒரு இயக்குனர் ஒரே படத்திற்காக இரண்டு முறை கைது செய்யப்பட்டது இந்த சம்பவத்தில்தான். எஸ்.ஜே.சூர்யா மீது புகார் கொடுத்த அந்த தணிக்கை குழு அதிகாரி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.