தரையில் விழுந்து கதறி கதறி அழுதேன்- தனது கனவுப்படம் நின்றுப்போனதை குறித்து கண்ணீர் விடும் எஸ்.ஜே.சூர்யா!
எஸ்.ஜே.சூர்யா தொடக்கத்தில் “வாலி”, “குஷி”, “நியூ”, “அன்பே ஆருயுரே” ஆகிய வெற்றித்திரைப்படங்களை கொடுத்து வந்தார். எனினும் அதன் பின் அவரது ஈடுபாடு நடிப்பின் மீது திரும்பியது. “கள்வனின் காதலி”, “வியாபாரி”, “நியூட்டனின் மூன்றாம் விதி” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, வெகு காலம் கழித்து “இசை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் அந்த படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “இறைவி” திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, “ஸ்பைடர்” திரைப்படத்தில் பயங்கரமான சைக்கோ கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “மெர்சல்”, “மாநாடு”, “டான்” ஆகிய திரைப்படங்களில் அசத்தலான வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே “பொம்மை” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இத்திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா தனது கனவுத்திரைப்படம் 10 நாட்களில் நின்றுபோனது குறித்து மிகவும் கவலையோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து “தேரே யார் ஹூம் மே” என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினர். இத்திரைப்படம் “உயர்ந்த மனிதன்” என்ற பெயரில் தமிழிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில காரணங்களால் 10 நாட்களிலேயே இத்திரைப்படம் நின்றுபோனது.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “நானும் அமிதாப்பும் நடித்த படம் 10 நாட்களில் நின்றுவிட்டது. அவருடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்தது.
கனி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கனியை கடித்து சுவைத்து முழுங்குவதற்கு முன்பே அந்த படம் நின்றுபோய்விட்டது. சிறுவர்கள் தரையில் உட்கார்ந்து அழுவார்களே, அது போல் அழுதேன். என்னால் அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை” என மிகவும் கவலையோடு தனது வலியை பகிர்ந்துகொண்டுள்ளார்.