Cinema History
படப்பிடிப்பில் நடிகையுடன் வாக்குவாதம் செய்த சேரன்… ஆனால் கடைசியில் நடந்ததுதான் டிவிஸ்ட்டே!!
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக திகழ்ந்து வரும் சேரன், தொடக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது நடிகை மஞ்சுளாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்தும் அதன் பின் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு சரத்குமார், விஜயக்குமார், ஸ்ரீஜா, ஆனந்த் பாபு, மஞ்சுளா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சேரன் பாண்டியன்”. இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சேரன் உதவி இயக்குனராக பணிபுரிந்திருந்தார்.
இந்த நிலையில் மஞ்சுளா அதிகாலையில் எழுந்திருப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் மஞ்சுளா மிகவும் ஆடம்பரமாக உடை அணிந்திருந்தாராம். அப்போது சேரன் அவர் அருகே சென்று “மேடம், இது அதிகாலையில் நடக்கும் காட்சி போல் படமாக்கப்பட வேண்டும். நீங்கள் அணிந்திருக்கும் புடவை இந்த காட்சிக்கு பொருத்தமாக இல்லை. ஆதலால் வேறு ஒரு சாதாரண புடவையை கட்டிக்கொண்டு வாருங்கள்” என கூறியிருக்கிறார்.
அதே போல் மஞ்சுளா, முகத்தில் அதிகளவில் மேக்கப்போடும் தென்பட்டிருக்கிறார். ஆதலால் மேக்கப்பையும் கொஞ்சம் கலைக்கச்சொல்லியிருக்கிறார் சேரன்.
சேரன் இவ்வாறு கூறியதும் மஞ்சுளா, “நீ யார் இதை சொல்வதற்கு, டைரக்டர் சொல்லட்டும் பார்த்துக்கொள்ளலாம்” என கூறியிருக்கிறார். அதன் பின் சேரன் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று இது குறித்து கூறியுள்ளார். உடனே கே.எஸ்.ரவிக்குமார் சேரனை போல் அல்லாமல் கொஞ்சம் கனிவோடு மஞ்சுளாவிடம் “கொஞ்சம் மேக்கப்பை குறைத்துக்கொள்ள முடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு மஞ்சுளா, தனது கைக்குட்டையை வைத்து லேசாக முகத்தில் போடப்பட்டிருந்த மேக்கப்பை சிறிதளவில் துடைத்துக்கொண்டாராம். ஆனால் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லையாம்.
எனினும் வேறு வழி இல்லாமல் அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அத்திரைப்படத்தை படக்குழுவினர் திரையிட்டுக் காட்டினர். அப்போது அந்த காட்சியை பார்த்த மஞ்சுளா, தான் அந்த காட்சிக்கு சம்பந்தமே இல்லாத உடையுடனும் முக அலங்காரங்களுடனும் தென்பட்டிருந்ததை உணர்ந்திருக்கிறார்.
அத்திரைப்படத்தை பார்த்து முடித்தப் பிறகு சேரனை அழைத்த மஞ்சுளா, “நீங்கள் அன்று சரியாகத்தான் கூறியிருக்கிறீர்கள். நான்தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. என்னுடைய தவறுதான்” என்று மிகவும் பெருந்தன்மையோடு நடந்துக்கொண்டாராம்.