எம்ஜிஆரின் சூட்டிங்கிலிருந்த நடிகையை ஆள் அனுப்பி அழைத்து வர சொன்ன ஜெய்சங்கர்! நடக்குமா?
தமிழ் திரையுலகில் 60, 70களில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் எம்ஜிஆர். நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு வெள்ளித்திரையில் கால் பதித்தார். நாடகம் என்றால் எம்.ஜி.ஆருக்கு உயிர் போன்றது. பல நாடகங்களை அரங்கேற்றம் செய்து அதையே படங்களிலும் நடித்துள்ளார்.
எம்ஜிஆர்,சிவாஜி, ஜெமினி இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகராக வந்தவரில் மிகவும் பெருமைக்கு உள்ளவர் ஜெய்சங்கர். சினிமாவிலும் சரி வாழ்க்கை நடைமுறையிலும் சரி ஒரு சில மாற்றங்கள் ஜெய்சங்கரால் நிகழ்ந்தவையே. சில சமயங்களில் எம்.ஜி.ஆருக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே ஏதோ ஒரு வித மனக்கசப்பு இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
அந்த வகையில் ஒரு நடிகை எம்ஜிஆருக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பழம்பெரும் நடிகையான எஸ் என் பார்வதி. இவர் சினிமாவில் நடித்து வந்தாலும் நாடகங்களில் இன்று வரை தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது மாலை 5 மணி ஆனால் இவர் நாடகத்தில் நடிப்பதற்காக வந்து விடுவாராம்.
அப்படித்தான் எல்லா படங்களிலும் இந்த ஒரு கண்டிஷனை கூறியே நடித்து வந்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் காஞ்சனாவிற்கு சித்தி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ் என் பார்வதி. அதே வேளையில் மாலை ஜெய்சங்கரின் நாடகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம்.
ஆனால் எம்ஜிஆரின் ஷூட்டிங்கில் கொஞ்சம் தாமதமாக ஜெய்சங்கர் இன்னும் பார்வதியை காணவில்லையே என்று பரிதவித்து வந்தாராம். உடனே ஜெய்சங்கர் தன்னுடைய உதவியாளர்களை அனுப்பி பார்வதியை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரியாதாம்.ஏனெனில் ஒரு வேளை எம்ஜிஜியாருக்குத் தெரிந்தால் படப்பிடிப்பையே ரத்து செய்து விடுவாராம். அதற்கு காரணம் நாடகத்தின் மீது அவருக்கு இருந்த பற்று.
அதனால் உடன் இருந்த நடிகர்களும் இதைப்பற்றி சின்னவரிடம் சொல்லவே இல்லையாம். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து பார்வதி ஜெய்சங்கர் நாடகத்திற்கு வந்து நடித்துக் கொடுத்தாராம். நாடக இடைவேளையில் பார்வதியை பார்த்து ஜெய்சங்கர் இதை சின்னவரிடம் நீ சொல்லி இருக்கலாமே என்று கூறினாராம்.
அதற்கு பார்வதி "அவரிடம் சொல்வதற்கு எல்லோரும் பயந்தார்கள். என்னையும் சொல்ல விடவில்லை" என்று கூற அதற்கு ஜெய்சங்கர் "இந்த விஷயத்தில் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. இதை நீ சின்னவரிடம் நேராக போய் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே நாடகத்தின் மீது அலாதி அன்பு கொண்ட சின்னவர் இதைப்பற்றி கூறினால் அவர் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார். இனிமேல் இந்த மாதிரி செய்யாதே "என சொல்லி அனுப்பினாராம்.