பில்லா படத்தில் ஜெயலலிதா... முத்து படத்தில் சுகன்யா.... இது எப்படி மிஸ் ஆச்சு...?!
தமிழ்த்திரை உலகில் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது உயரத்தை இதுவரை எந்த ஒரு நடிகரும் எட்டிப்பிடிக்க முடியவில்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
80களில் இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவருக்குத் தனி அடையாளம் என்றால் அது ஸ்டைலு தான். இவரது ஸ்டைலும், நடிப்பும் சேரும்போது இன்னும் அது மெருகேறுகிறது. ரசிகன் உற்சாகமாகத் துள்ளுகிறான்.
தன்னால் முடியாத விஷயங்களை எல்லாம் தன் தலைவன் செய்கிறான் என தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறான். படம் வெளியாகும்போது கட் அவுட், பாலாபிஷேகம், கிடா வெட்டு, மொட்டை போடுதல் என தலைவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்து மகிழ்கிறான்.
ஆனால் ரஜினியோ திரை உலகில் உச்சநட்சத்திரமாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் எளிய மனிதர் தான். அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்றே அத்தனை முன்னணி நடிகைகளும் ஆசைப்படுவர்.
குஷ்பு, மீனா, ரம்பா, விஜயசாந்தி, நதியா, சௌந்தர்யா, ஜோதிகா, திரிஷா, ஐஸ்வர்யாராய் என பெரும்பாலான கதாநாயகிகள் நடித்தும் விட்டனர். அப்படி நடிக்காத நாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். சுகன்யா, நிரோஷா, சித்தாரா, ஜெயலலிதா என ஒரு சில நடிகைகள் தான் நடிக்கவில்லை.
பில்லா படத்தில் நாயகி ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்க, அப்படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, முதலில் அணுகியது ஜெயலலிதாவைத் தான். ஆனால், ஜெயலலிதாவிற்கு அப்போதிருந்த வாழ்வியல் சூழல்கள் காரணமாக, நடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதை, ஜெயலலிதாவே, ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு, 10.06.1980 அன்று எழுதிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.
ரங்கா படத்திலும், கே.ஆர்.விஜயா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஜெயலலிதாதான். அப்போது, ஜெயலலிதா, அரசியலில் நுழையத் தீர்மானித்து, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததால், வாய்ப்பை நிராகரித்து விட்டார்.
அதே போல தான் நடிகை சுகன்யாவும் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தலைவர் கூட நடித்து விட்டால் உலக அளவில் பேமஸ் ஆகிவிடலாம். அவருக்கு அந்த ஆதங்கம் இருந்தது.
அதை அவரே என்ன சொல்கிறார் என பார்க்கலாம். எல்லோரும் என்கிட்ட ஏன் சூப்பர்ஸ்டார் கூட நடிக்கலன்னு கேட்பாங்க. முத்து படத்துல முதல்ல டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் என்கிட்ட தான் நடிக்கக் கேட்டு ஆள் அனுப்பிருக்காங்க. அந்தத் தகவல் எனக்கு வரல. மீனா வேடத்துக்கான அந்த வாய்ப்பை நான் தவறவிட்டது ரொம்ப வருத்தம். ஆனாலும் மீனா அந்தப் படத்துல ரொம்பவே சூப்பரா நடிச்சிருக்காங்க.