இருக்கு...ஆனா...இல்ல...! சினிமா உலகில் தடம் மாறும் இயக்குனர்கள்

Subramaniyapuram
தமிழ்த்திரை உலகில் நுழைந்ததும் துடிப்பும் ஆற்றலுமிக்க இளம் இயக்குனர்கள் தான் கற்றுக் கொண்ட எல்லா வித்தைகளையும் முதல்படத்திலேயே பயன்படுத்தி விடுவார்கள்.
அதன்பிறகு அவர்களிடம் ஃப்ரஷ்ஷான ஐட்டம் இருப்பதில்லை. சினிமா உலகில் அடுத்தடுத்த படங்களை சந்திக்கும்போது கொஞ்சம் தடுமாறவே செய்வார்கள். உதாரணமாக சில இயக்குனர்களின் படங்களைப் பார்ப்போம்.
சசிகுமார்
இயக்குனர் சசிகுமார் தமிழ்ப்பட உலகில் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். 2008ல் வெளியான அவரது சுப்ரமணியபுரம் இளம் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலரானது.

Sasikumar
80களில் உள்ள கதையை எடுத்திருந்தாலும் இன்றைய இளைஞர்களும் விரும்பும் வகையில் உயிரோட்டத்துடன் படத்தை எடுத்திருந்தார். இதனால் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் படம் வெகுவாகக் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். இந்தப்படத்தில் சசிகுமாரின் நண்பர் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடித்து இருந்தார். சிறந்த இயக்குனர், சிறந்த படம் என 2 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றது.
இதனால் அவரது 2வது படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 2010ல் ஈசன் வெளியானது. சற்றே வித்தியாசமான கதைகளம் தான் என்றாலும் முதல் பட அளவுக்கு ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை.
தொடர்ந்து தனது ரூட்டை மாற்றினார். தயாரிப்புகளிலும், முழுநேர நடிகராகவும் களம் இறங்கி விட்டார்.
அழகம்பெருமாள்

dum dum dum
2001ல் இவரது முதல் படம் வெளியானது. மாதவன், ஜோதிகாவின் நடிப்பில் டும் டும் டும் என்ற வெற்றிப்படம். காதல் கதையை யதார்த்தமும், நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து ரசிகர்களுக்கு ருசியாகக் கொடுத்திருப்பார்.
படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அடுத்து தானே இவரது திறமை எப்படி என்று தெரியவரும்...அதற்கேற்ப 2003ல் அவருடைய ஜூட் படம் வெளியானது. அதற்கடுத்து 2004ல் தளபதி விஜயின் உதயா படமும் வெளியானது.

Alagamperumal
ரெண்டுமே படுதோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து தனது ரூட்டை மாற்றினார். 2007ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு என்ற இந்திப்படத்தைத் தமிழில் டப் செய்கையில் படத்திற்கு தமிழில் வசனம் எழுதினார். தொடர்ந்து தனது ரூட்டை மாற்றி முழுநேர நடிகரானார்.
ஏ.ஜே.முருகன்
2004ல் சிம்புவின் அசுர நடிப்பை மன்மதன் படத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தார்.

Manmathan
படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் கதை கமலின் சிகப்பு ரோஜாக்கள் படத்தை நினைவு படுத்தியது.
சிம்புவின் நடிப்பு, யுவனின் இசை, ராஜசேகரின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்று மெகா ஹிட்டாக்கின.

A.J.Murugan
இயக்குனர் பெயரளவுக்குத் தான்...மற்றபடி படத்தில் சிம்புவின் பங்கு தான் அதிகம் என அப்போது சொல்லப்பட்டது.
தொடர்ந்து வெற்றியைத் தருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று வரை எந்த ஒரு படத்தையும் முருகன் இயக்காதது ஏனோ என்று புரியவில்லை.
இதைப் பார்க்கும்போது நமக்கு வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. இவர்களிடம் எல்லாம் நல்ல திறமை இருக்கு. ஆனால் இன்னும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவு வெளிவரவில்லை.