மீண்டும் ஹீரோ!..அடுத்த சந்தானம் ஆகிறாரா நடிகர் சூரி!..பாத்து செய்யிங்க பாஸ்!..

நடிகர் சூரி தமிழில் பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார். அவரின் புரோட்டா காமெடி இன்று வரை மிகவும் பிரபலமான ஒன்று. சந்தானம் தனது கவுண்ட்டர் காமெடிகளால் கோலோச்சிக்கொண்டிருந்த போதுதான் ஒரு கிராமத்து நக்கல் பாணியில் கலக்கலாக முன்னேறி வந்தார் சூரி.
தமிழின் முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி ரோலில் கலக்கிய சூரி, திடீரென வெற்றிமாறன் இயக்கும் “விடுதலை” திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளிவந்தது. அதுவும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. கடந்த 2 வருடங்களாக “விடுதலை” திரைப்படத்திலேயே நடித்து வருவதால் “விருமன்” “டான்” போன்ற திரைப்படங்களை தவிர வேறு எந்த திரைப்படத்திலும் தலைக்காட்டவில்லை சூரி.
இதனை தொடர்ந்துதான் சமீபத்தில் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு தேதி குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் தற்போது சூரியின் அடுத்த திரைப்படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அந்த புதிய திரைப்படத்திலும் சூரி ஹீரோவாகத்தான் நடிக்கிறாராம். அத்திரைப்படத்தை “மதயானைக்கூட்டம்” திரைப்படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்குகிறாராம். மேலும் இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவருகிறதாம்.
“விடுதலை” திரைப்படத்தை முடித்துவிட்டு சூரி, அடுத்தடுத்த திரைப்படங்களில் காமெடி ரோலில் கலக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தனது அடுத்த திரைப்படத்திலும் ஹீரோவாகத்தான் சூரி நடிக்கிறார் என வெளிவந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
முன்னதாக தமிழின் டாப் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், திடீரென ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என கிளம்பினார். அப்படி கிளம்பியவர் அதன் பின் வேறு எந்த கதாநாயகருடனும் காமெடியனாக நடிக்கவில்லை. மேலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களும் அவ்வளவாக வெற்றிபெறவும் இல்லை. இந்த நிலையில் தான் சூரி தனது அடுத்த திரைப்படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வருகிறது. காமெடியனாக ஜெயித்த சூரி, தற்போது ஹீரோவாகவும் ஜெயிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.