Cinema News
சூரியின் பரோட்டா காமெடி வர வேண்டியது ஜெயம் ரவி படத்துலதான்!.. எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?..
சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்து சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து முன்னேறியவர்தான் நடிகர் சூரி. சென்னையில் பல கட்டிடங்களுக்கு சூரி பெயிண்ட், சுண்ணாம்புஅடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
துவக்கத்தில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வருவார். பெரும்பாலும் கிராமத்து கதைகளில்தான் சூரியின் முகம் செட் ஆகும். எனவே, சில இயக்குனர் அவரை பயன்படுத்தினார்கள். இயக்குனர் எழில் இயக்கிய மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நண்பர்களில் ஒருவராக வருவார்.
அப்போதுதான் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நட்பு துவங்கியது. அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒருகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா போன்ற மற்ற நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.
சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்திற்கு பின் பரோட்டா சூரி எனவும் ரசிகர்கள் அழைத்தனர். அதன்பின் எழில் இயக்கத்தில் உருவான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா புருஷனாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாறினார் சூரி. அவரின் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களிலும் சூரி நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான் இயக்குனர் எழில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
‘சுசீந்திரன் என்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்தான். ஜெயம் ரவியை வைத்து ‘தீபாவளி’ படம் எடுத்தபோது அந்த படத்தில் நான் வைக்க ஆசைப்பட்ட காமெடி அது. ஆனால், எடுக்க முடியவில்லை. சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனரான போது என்னை தொடர்பு கொண்டு ‘அந்த பரோட்டா காமெடியை நான் வச்சிக்கட்டுமா சார்?’ என கேட்டான். ‘காமெடியை கெடுக்காம எடு’ என சொன்னேன். மிகவும் அருமையாக அந்த காட்சியை அவன் இயக்கி இருந்தான்’ என சொன்னார் எழில்.