1960 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படிக்காத மேதை”. இத்திரைப்படத்தை ஏ.பீம் சிங் இயக்கியிருந்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையையும் வசனங்களையும் எழுதியிருந்தார்.
“படிக்காத மேதை” திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்துதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
1953 ஆம் ஆண்டு பெங்காலியில் “ஜோக் பியோக்” என்று ஒரு திரைப்படம் வெளியானது. அத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் மாபெறும் வெற்றி பெற்றிருந்தது. அத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசாமி பெற்றிருந்தார். தமிழில் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீதர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கிருஷ்ணசாமி, ஒரு நாள் ஸ்ரீதரை அழைத்து அந்த பெங்காலி திரைப்படத்தை போட்டுக்காட்டினார்.
அத்திரைப்படத்தை பார்த்த ஸ்ரீதருக்கு அத்திரைப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதனை வெளிப்படையாக கூறாமல் “நான் இப்போது நிறைய படத்திற்கு கதை வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆதலால் இப்போது என்னால் இந்த படத்தில் பணியாற்றமுடியாது. நீங்கள் வேண்டுமானால் என்னுடைய உதவியாளரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் பேசிப்பாருங்களேன்” என கூறிவிட்டு, தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் அங்கிருந்து சென்றுவிட்டார் ஸ்ரீதர்.
அதன் பின் அந்த பெங்காலி திரைப்படத்தை சிவாஜி கணேசனுக்கு போட்டுக்காட்டினார். அவருக்கோ இத்திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக இதில் தான் நடிப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
அப்போது கிருஷ்ணசாமி “இத்திரைப்படத்தை யார் இயக்கினால் நன்றாக இருக்கும்?” என சிவாஜி கணேசனிடம் கேட்டார். அதற்கு அவர் பல இயக்குனர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்.
சிவாஜி கணேசன் பரிந்துரைத்த இயக்குனர்களை எல்லாம் சென்று சந்தித்தார் கிருஷ்ணசாமி. ஆனால் யாருக்குமே அந்த படத்தை இயக்க விருப்பமில்லை. இந்த விஷயத்தை சிவாஜியிடம் வந்து கூறினார் கிருஷ்ணசாமி.
“சரி, இந்த படத்திற்கு வசனம் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சென்று பேசுங்கள். அதன் பின் யார் இயக்குனர் என்பதை முடிவு செய்துகொள்ளலாம்” என சிவாஜி கூற, அதன்படி அந்த பெங்காலி திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு போட்டுக் காட்டினார் கிருஷ்ணசாமி.
அந்த படத்தை பார்த்த கோபாலகிருஷ்ணனுக்கு அந்த படம் மிகவும் பிடித்துப்போனது. மேலும் “இப்படிப்பட்ட உயிரோட்டமான கதைக்கு வசனம் எழுத நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” எனவும் நெகிழ்ச்சியாக கூறினார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒப்புதல் சொன்ன செய்தியை சிவாஜியிடம் வந்து கூறினார் கிருஷ்ணசாமி. உடனே சிவாஜி கணேசன், அத்திரைப்படத்தை இயக்க பீம் சிங்கை பரிந்துரைத்தார்.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ஒரு கவர்ச்சி நடிகையை ஒப்பந்தம் செய்யலாம் என்ற யோசனையில் தயாரிப்பாளர் இருந்தாராம். இந்த செய்தியை கேள்விபட்டவுடன் நேராக கிருஷ்ணசாமியை பார்க்க வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் “இத்திரைப்படத்திற்கு கவர்ச்சி நடிகையை போட்டால் நன்றாக இருக்காது, சௌகார் ஜானகிதான் சரியாக இருப்பார்” என பரிந்துரைத்தாராம். மேலும் சௌகார் ஜானகியை தவிர்த்து வேறு எந்த நடிகையை ஒப்பந்தம் செய்தாலும் அந்த படத்தில் இருந்து தான் விலகிவிடுவதாகவும் முடிவெடுத்தார்.
ஒரு நாள் சௌகார் ஜானகி நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். அப்போது அவரை சந்தித்த சௌகார் ஜானகி, இன்று இரவு எனது வீட்டில் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் தயவு செய்து வரவேண்டும்” என கேட்டுக்கொண்டாராம்.
அதன்படி அன்று இரவு சௌகார் ஜானிகியின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அங்கே அவரை தவிற வேறு யாருமே வரவில்லை. “என்ன விருந்துக்கு யாருமே வரவில்லையா?” என அவர் கேட்க, உடனே தனது அறைக்குச் சென்ற சௌகார் ஜானகி ஒரு ஆளுயர மாலையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
“யாரையாவது அழைத்தால்தானே வருவார்கள். நான் உங்களை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை” என கூறி அந்த மாலையை அவருக்கு அணிவித்தார். அதன் பின் அவரது காலில் விழுந்த சௌகார் ஜானகி, “சிவாஜி மாதிரியான மிகப்பெரிய நடிகர் நடிக்கிற படத்தில் என்னை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளரிடம் சண்டை போட்டீர்களே. அதற்காகத்தான் இந்த விருந்து” என சௌகார் ஜானகி கூறினாராம்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அவர் கேட்க “இன்று நெப்ட்யூன் ஸ்டூடியோவில் எனக்கு படப்பிடிப்பு இருந்தது. அங்கே தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி, என்னை நடிக்க வைப்பதற்காக நீங்கள் பரிந்துரைத்த செய்தியை சிவாஜியிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர்களின் உரையாடலை கேட்ட பணிப்பெண் என்னிடம் வந்து அப்படியே கூறினார். இதனை கேட்டவுடன் எனது நன்றியை தெரிவிக்க உங்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்” என்று சௌகார் ஜானகி கூறினாராம். இதனை கேட்டதும் மனம் நெகிழ்ந்து போனாராம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவ்வாறுதான் “படிக்காத மேதை” திரைப்படம் உருவானது.
தமிழ் சினிமாவில்…
Biggboss Tamil8:…
கங்குவா திரைப்படத்திற்கு…
நடிகர் சிவகார்த்திகேயன்…
Biggboss Tamil8:…