எஸ்பிபி பாட மறுத்த பாடல்கள்… ஆனால் கிடைத்ததோ தேசிய விருது…கிளாசிக் ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், நம் நினைவுகளில் இருந்து என்றுமே மறையாத பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தேசிய அளவிலான பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், 5 தேசிய விருதுகளையும் பெற்றார்.
அப்படி அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல்களில் ஒன்றுதான் “ஓம்கார நாதனு”. இப்பாடல் மாபெரும் ஹிட் அடித்த “சங்கராபரணம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். “சங்கராபரணம்” என்ற தெலுங்கு திரைப்படம் 1980 ஆம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. அதற்கு முழுமுதல் காரணம் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களே.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “சங்கராபரணம்” திரைப்படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். இதில் மொத்தம் 10 பாடல்கள் இடம்பெற்றன. இந்த 10 பாடல்களையும் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். ஆனால் இத்திரைப்படத்தின் பாடல்களை பாடுவதற்கு முதலில் மறுத்துவிட்டாராம் எஸ்.பி.பி.
“சங்கராபரணம்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சாஸ்த்திரிய சங்கீதத்தில் அமைந்திருந்ததால், எஸ்.பி.பி அப்பாடல்களை பாட மறுத்துவிட்டார். ஆதலால் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், சாஸ்த்திரிய சங்கீதம் தெரிந்த வேறு ஒரு பாடகரை பாட வைக்க முடிவுசெய்தாராம்.
ஆனால் கே.வி.மகாதேவனுக்கு உதவியாளராக பணிபுரிந்த புகழேந்தி என்பவர் “இப்பாடல்களை எல்லாம் எஸ்.பி.பியே பாடினால்தான் சிறப்பாக இருக்கும்” என கூறினாராம். ஆதலால் புகழேந்தி அப்பாடல்களை எல்லாம் தனது குரலில் பதிவு செய்து, எஸ்.பி.பிக்கு அனுப்பினார்.
“அப்பாடல்களை எல்லாம் நன்றாக திரும்ப திரும்ப கேட்டு, உங்களுடைய பாணியிலேயே பாடி பாடிப் பயிற்சி பெறுங்கள்” என எஸ்.பி.பியிடம் கூறி ஊக்கம் அளித்தாராம் புகழேந்தி. அதன் பின்புதான் எஸ்.பி.பி. திரும்ப திரும்ப பயிற்சி பெற்று அப்பாடல்களைப் பாட ஒப்புக்கொண்டாராம்.
“சங்கராபரணம்” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இப்போதும் கூட இப்பாடல்களை ரசித்து கேட்பவர்கள் பலர் உண்டு.