12 மணி நேரத்தில் 21 பாடல்கள்... அசத்திய எஸ்பிபிக்காக காத்திருந்த எம்ஜிஆர்
தமிழ்த்திரை உலகில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அவர்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் நம்மை விட்டு நீங்கினாலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை. அது காலத்தால் அழியாத காவியங்கள். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரது சாதனையை சொல்லிக் கொண்டே இருக்கலாம். 1981ல் பெங்கள10ருவில் உள்ள ஒரு ரெக்கார்டிங் தியேட்டர். அங்கு ஒரு இமாலய சாதனையை செய்தார். அதாவது 12 மணி நேரத்துக்குள் 21 பாடல்களைப் பாடி அசத்தினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்காக காத்திருந்துள்ளார். அது ஒரு சுவாரசியமான சம்பவம். அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் எஸ்பிபி.க்கு பாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அந்தப் பாடலைப் பாடும் முன் அவருக்கு டைபாய்டு காய்ச்சல். அதனால் குறித்த நேரத்தில் அவரால் பாடமுடியவில்லை. இதனால் தனக்கு அந்த வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சுன்னு வருத்தப்பட்டாராம். ஆனாலும் அவருக்காக எம்ஜிஆர் காத்துக் கொண்டு இருந்தாராம்.
அப்படி அவர் பாடியதுதான் ஆயிரம் நிலவே வா பாடல். என்ன ஒரு அருமையான பாடல் என்பதைக் கேட்டுப்பாருங்க... தெரியும். இந்தப் பாடல் தான் முதலில் வெளியானது. ஆனால் அவர் பாடிய முதல் பாடல் சாந்தி நிலையம் படத்தில் தான் வருகிறது. அது இயற்கை என்னும் இளைய கன்னி பாடல். அதுதான் தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
1969ல் எம்ஜிஆர் சொந்தமாகத் தயாரித்த படம் அடிமைப் பெண். இந்தப் படத்தின் இயக்குனர் கே.சங்கர். படத்தின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன். எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ, சந்திரபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஆயிரம் நிலவே வா, அம்மா என்றால், காலத்தை வென்றவன், தாய் இல்லாமல், உன்னை பார்த்து, ஏமாற்றாதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.