நீ, இளையராஜாலாம் இங்க வராதீங்கடா!... எஸ்.பி.பி-யிடம் சொன்ன இசைக்கலைஞர்கள்!..

Ilayaraja spb: இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சினிமாவை பொறுத்தவரை இளையராஜாவுக்கு சீனியர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.எஸ்.வி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருக்கும் கருப்பு வெள்ளை காலத்திலேயே பாடியிருக்கிறார்.
அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமான பின் அவரின் இசையிலும் பாட துவங்கினார் எஸ்.பி.பி. இருவரும் ஒரே வயது என்பதால் 'வாடா போடா' என பழகும் நண்பர்களாக மாறினார்கள். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகராக எஸ்.பி.பியே இருந்தார்.
ஒரு பாடலை கம்போஸ் பண்ணி முடித்தவுடன் எஸ்.பி.பி அதை பாடவேண்டும் என்பதுதான் இளையராஜாவின் சாய்ஸாக இருக்கும். அவர் ஊரில் இல்லை என்றால் மட்டுமே அந்த வாய்ப்பு யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்ற பாடகர்களுக்கு போகும். ஏனெனில், எஸ்.பி.பி சினிமாவில் பாடுவது மட்டுமில்லாமல் அடிக்கடி இசைக்கச்சேரிகளில் பாட வெளிநாடுகளுக்கு போய்விடுவார்.
இளையைராஜா என்னை நினைக்கிறார்.. அவர் எதை விரும்புகிறார் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார் எஸ்.பி.பி. அதுதான் இளையராஜாவுக்கும் தேவையாக இருந்தது. இளையராஜாவின் இசையில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன், சத்தியராஜ் என பலருக்கும் அற்புதமான மெலடிகளை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.
இடையில் இசைக்கச்சேரிகளில் எனது பாடலை என் அனுமதியின்றி பாடக்கூடாது என எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்ப, இருவரும் சில வருடங்கள் பேசாமல் இருந்த சம்பவமும் நடந்தது. ஆனால், அதே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ‘எழுந்து வா பாலு’ என வீடியோ போட்டார் இளையராஜா. இப்போது இளையராஜாவின் லைவ் கச்சேரிகளில் எஸ்.பி.பியின் மகன் சரண் பாடிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘சில சமயம் மும்பையில் பாடலை ரெக்கார்டிங் செய்வோம். ஒருமுறை பாடலுக்கு இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் என்னையும், இளையராஜாவையும் பார்ட்டிக்கு அழைத்தார்கள். ‘ராஜா வரமாட்டார். நான் வருகிறேன்’ என சொல்லி பார்ட்டியில் கலந்து கொண்டேன். மதுபோதையில் அவர்கள் ‘டேய் நாங்க இங்க ஜிங்கிள்ஸ் வாசிச்சிக்கிட்டு பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம். ராஜா கொடுக்கிற நோட்ஸ்லாம் வாசிக்கவே முடியல. சின்ன தப்பு பண்ணாலும் அதை கரெக்ட்டா கண்டுபிடிச்சி மறுபடி வாசிக்க சொல்றார். நீ என்னடான்னா ஒரே டேக்ல பாடுற.. நீ, இளையராஜாலாம் இங்க வராதீங்கடா. சென்னையிலேயே ரிக்கார்டிங் பண்ணுங்க’ என சொன்னார்கள்’ என பகிர்ந்து கொண்டார் எஸ்.பி.பி.