எஸ்.பி.பி ரொம்ப கடுப்பாகிட்டார்.. ‘தந்தானே தாமரப்பூ’ பாடலுக்கு பின்னால் இத்தனை பிரச்சனையா?

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இசையமைப்பாளர் பரணி. சமீபமாக காலமாக இவர் எந்த படத்திற்கு இசையமைக்கவில்லை. பெரியண்ணா, பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் இசையமைத்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெரியண்ணா படத்தில் வரும் தந்தானே தாமரப்பூ பாடல் உருவாகும் போது நடந்த சுவாரசியமாக விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
1999ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மனோரம்மா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பெரியண்ணா. இந்த படத்தில் தான் இசையமைப்பாளர் பரணி அறிமுகமானார். இந்த படத்தில் வரும் தந்தானே தாமரப்பூ, நிலவே நிலவே, நா தம் அடிக்குற ஸ்டைல பாத்து ஆகிய பாடல்கள் செம ஹிட். இதில் வரும் தந்தானே தாமரப்பூ பாடலை எஸ்.பி.பியும் சித்ராவும் இணைந்து பாடியிருப்பார்கள்.
இந்த பாடலுக்கு எஸ்பிபி பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளர் பரணி இயக்குநரிடம் கூறியுள்ளார். அப்போது மிகவும் பிசியாக இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் ஒரு நாள் வந்து பாடி கொடுத்துள்ளார். முதல் படம் என்பதால், இசையமைப்பாளர் பரணி மிகவும் பதட்டமாக இருந்துள்ளார். எஸ்.பி.பியும் புதிய இசையமைப்பாளர் என்பதால், பெரிதாக எதுவும் கேட்காமல், பாடல் வரிகளை பார்த்து இசைக்கு ஏற்ப பாடிவிட்டு, சென்றுவிட்டார்.
ஆனால் இசையமைப்பாளர் பரணி இந்த பாடலை வேறு மாடுலேஷனில் பாட வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அதை எப்படி அவரிடம் கூறுவது என்று தெரியாமல் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்ட போது, நீங்கள் நினைத்த படி பாடல் வேண்டும் என்றால், அவரை மீண்டும் ஒருமுறை வந்து பாடி கொடுக்க சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். பயந்துக்கொண்டே அழைத்து சொன்னேன்.
3 நாட்கள் கழித்து வந்தார். மிகவும் கோபமாக இருந்தார். நான் நல்லா தான பாடினேன் ஏன் மீண்டும் பாட வேண்டும் என்று கேட்டார். நான் சில இடங்களில் இழுத்து, வேறு மாதிரி பாட வேண்டும் என்று நினைத்தேன் என கூறி பாடி காட்டினேன். உடனே அவர் புரிந்துகொண்டு, எனக்காக மீண்டும் ஒருமுறை பாடிக்கொடுத்தார் என்று இசையமைப்பாளர் பரணி தெரிவித்துள்ளார்.