`காதலன்’ படத்தில் எஸ்.பி.பி செய்த குறும்பு.. ஓஹோ இதுக்கு தான் இப்படியா?
இயக்குநர் ஷங்கர், ஜென்டில்மேன் படத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது படமாக இயக்கிய படம் காதலன். 1994-ல் வெளியான இந்தப் படத்தில் பிரபுதேவா, நக்மா, கிரீஷ் கர்னாட், ரகுவரன், வடிவேலு, எஸ்.பி.பி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படத்தில் இடம்பெற்றிருந்த மெலடியாகட்டும் இன்றளவும் எவர்கிரீன் பாடல்களாக தமிழ் சினிமாவில் இடம்பெற்றுவிட்டன. தமிழ் மட்டுமல்லாது இந்தியில் பிரேமிக்குடு என்கிற பெயரிலும் இந்தியில் ஹம்சே ஹாய் முக்காபுலா என்கிற பெயரிலும் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. ஷங்கருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்ததோடு, அடுத்ததாக கமலை வைத்து இந்தியன் பட வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது என்றே சொல்லலாம்.
1994-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்தப் படத்தில் பல தரமான சம்பவங்களை ஷங்கர் செய்திருப்பார். பிரபு என்கிற கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபுதேவாவின் கல்லூரித் தோழரான வசந்த் கதாபாத்திரத்தில் வடிவேலு நகைச்சுவையில் மிரட்டியிருப்பார். படத்தில் அவருக்கென தனி பின்னணி இசையையும் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருப்பார். பாடல்களை படமாக்கியதில் புதுமை புகுத்திய ஷங்கர், கண்ணாடி பேருந்து, முக்காபுலா பிரபுதேவா நடனம், அவரும் எஸ்.பி.பியும் ஆடிக்கொண்டே பாடும் பாடல், பிரபுதேவாவின் பரதநாட்டிய ஓவியம், பேட்டாரப் பாடல் என முக்கியமான அம்சங்களையும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.
இதையும் படிங்க: அவரை வர சொல்லுங்கள்!.. மரண படுக்கையில் எஸ்.பி.பி பார்க்க விரும்பிய அந்த நபர்…..
படத்தில் இடம்பெற்றிருக்கும் துள்ளலிசைப் பாடல்தான் காதலிக்கும் பெண்ணின் பாடல். இதை எஸ்.பி.பியோடு இணைந்து நரேஷ் ஐயர் பாடியிருப்பார். பிரபுவின் தந்தை கேரக்டரில் நடித்த எஸ்.பி.பி பாடலில் தோன்றி நடனமாடவும் செய்திருப்பார். இந்தப் பாடல் பற்றியும் எஸ்.பி.பி நடிப்பு பற்றியும் ஒரு பேட்டியில் பேசிய இயக்குநர் ஷங்கர், 'எஸ்.பி.பி எந்தவித அலட்டல் இல்லாமல் நடித்துக் கொடுப்பவர்.
இயல்பாகவே எந்தவொரு காட்சியையும் அவ்வளவு சிறப்பாக நடித்து முடித்துவிடுவார். அவ்வளவு பெரிய பாடகர், நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு நன்றாகவும் நடித்துக் கொடுத்திருந்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காதலிக்கும் பெண்ணின் பாடல் பற்றி சொல்லலாம். எஸ்.பி.பி என்ன செய்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். பாட்டில் பிரபுதேவா கஷ்டப்பட்டு பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருப்பார். இவர் நின்ற இடத்திலேயே கைகளை ஆட்டி அவ்வளவு அழகாக ஆடுவார்.
ஒளிப்பதிவாளர் ஜீவா படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அருமையாகப் படம்பிடித்திருந்தார். அந்தப் பாடலின் முன்னோட்டமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எஸ்.பி.பி தெரியாமல் கேமராவைத் தட்டிவிட்டார். அதனால், அந்த ஒரு ஃபிரேம் ஆடுவது போல் இருந்தது. ஜீவாவிடம் கேட்டபோது அவர் குதிக்கும்போது ஆடுகிறது என்று சொன்னார். பின்னர், இதை ஏன் பாட்டில் நிஜமாகவே பயன்படுத்தக் கூடாது என்று திட்டமிட்டோம். அதன்படி, எஸ்.பி.பி குதிக்கும்போது கேமராத் திட்டமிட்டு ஆட்டினார் ஜீவா. அது அந்தப் பாட்டிலும் இடம்பெற்றிருக்கும்’ என்று சொல்லியிருந்தார்.