பைசன்.. டீசல்.. ட்யூட்... தீபாவளி ரிலீஸில் எந்த படம் பார்க்கலாம்?!.. ஒரு பார்வை!...

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள்: தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு. புது உடைகள் என்பதோடு புதிய திரைப்படங்கள் ரிலீஸ் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். தீபாவளியின் போது தங்களின் படங்கள் வெளியாவதை ரசிகர்கள் கவுரமாகவும், சந்தோஷமாகவும் உணர்கிறார்கள். 80.90 களில் தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பிரபு, ராமராஜன், சத்யராஜ் உள்ளிட்ட எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாகும். ஒரு கட்டத்தில் அது ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என குறைந்தது. அதன்பின் ரஜினி, கமல் என குறைந்தது.
இளம் நடிகர்களின் படங்கள்: விஜய், அஜித் ஆகியோர் வளர்ந்த பின் தீபாவளிக்கு அவர்களின் படங்கள் மோதியது. தற்போது பல இளம் நடிகர்கள் வந்துவிட்டார்கள். இந்த தீபாவளியை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஜய் சேதுபதி, விஷால், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட எந்த நடிகரின் படமும் வெளியாகவில்லை. மாறாக துருவ் விக்ரமின் பைசன் காளமாடன், ஹரிஸ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் ஆகிய 3 படங்கள் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது.
Dude: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே மூலம் நடிகராகவும் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ட்யூட் (Dude). கீர்த்தீஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, நேகா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருக்க சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலையும் பிரதீப் பாடியிருக்கிறார். ஒரு கலர்புல் குடும்ப பொழுதுபோக்கு மற்றும் செண்டிமெண்ட், காமெடி கலந்த கலவையாக Dude வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு ஜாலியாக குடும்பத்துடன் சென்று பார்க்கும்படி படத்தை எடுத்திருக்கிறார்கள். தீபாவளி ரேஸில் இந்த படம் அதிக வரவேற்பை பெற வாய்ப்புண்டு.
Bison: அடுத்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள பைசன் படம் வெளியாகவுள்ளது. மாரியின் முந்தைய படங்களை போலவே இதுவும் ஒரு சீரியஸ் சினிமா. வழக்கம்போல் தென் மாவட்டத்தை சேர்ந்த கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு இளைஞன் சாதி ரீதியாக என்ன பிரச்சனையை சந்திக்கிறான் என்பதை இந்த படத்தில் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். இது தீபாவளி மூடுக்கு ஏற்ற படம் இல்லை என்றாலும் விவாதங்களை துவங்கி வைக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்திற்காக துருவ் கடந்த 3 வருடங்களாக உழைப்பை கொட்டியிருக்கிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
Diesel: அடுத்து இதுவரை ரொமான்ஸ் மட்டும் செய்துவந்த ஹரிஸ் கல்யாண் முதன் முறையாக டீசல் படம் மூலம் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். கடல் வழியாக நடக்கும் டீசல் கட்டத்தில், அதன் பின்னணியில் இங்கும் கடத்தல் கும்பல்கள் பற்றி இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஹரிஸ் கல்யாணின் பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் டீசல் தனக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என ஹரீஸ் கல்யாண் எதிர்பார்த்து காத்திருக்கிறார். .
இப்படி மூன்று திரைப்படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. இதில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.