Dude: ஹாட்ரிக் ஹிட்!.. 2K கிட்ஸ்கள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதன்!.. ஒரு அலசல்!...

ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு பிடித்தபடி படமெடுக்கத் தெரிந்த யாராக இருந்தாலும் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவார்கள் என்பதற்கு பிரதீப் ரங்கநாதன் உதாரணமாக மாறியிருக்கிறார்.இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி துறையில் வேலை செய்துவந்த பிரதீப்புக்கு சினிமா எடுப்பதில் அதிக ஆர்வம். அப்பாவிடமே சொல்லாமல் வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை எடுத்து வந்திருக்கிறார். இவரது குறும்படங்கள் பெரிய ரீச் இல்லை என்பதால் சினிமா எடுக்க ஆசைப்பட்டார்.
பிரதீப்பை நம்பிய ஜெயம் ரவி: ஆனால் பெரிய நடிகர்களை அவரால் சந்திக்க கூட முடியவில்லை. சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொன்னால் அவர்கள் பிரதீப்பை நம்பவில்லை. பிரதீப்பிடம் கதை கேட்ட ஜெயம் ரவி ‘நீ இதில் ஒரு காட்சியை போய் ஷூட் பண்ணி எனக்கு காட்டு.. எனக்கு நம்பிக்கை வந்தா இந்த கதையில் நான் நடிக்கிறேன்’ என சொல்ல, அவர் சொன்னபடியே ஒரு காட்சியை ஷூட் செய்து பிரதீப் அவரிடம் காட்ட ரவிக்கு பிடித்துப்போய் அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மத்தார்.
2கே கிட்ஸ்களை கவர்ந்த லவ் டுடே: அப்படி வெளியான கோமாளி படம் ஜெயம் ரவிக்கு முக்கிய படமாக அமைந்தது. படத்தின் சக்சஸ் மீட்டில் பிரதீப் கன்னத்தில் முத்தம் கொடுத்து நன்றி சொன்னார் ஜெயம் ரவி. அதன்பின் 3 வருடங்கள் பிரதீப் ரங்கநாதன் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆனால் லவ் டுடே என்கிற படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த காலத்து 2கே கிட்ஸ்கள் செல்போனை எப்படி பயன்படுத்துகிறார்கள்.. பெண் தோழிகளை எப்படி ட்ரீட் செய்கிறார்கள் என்பதை படத்தில் பேசியிருந்தார் பிரதீப்.
எனவே, 2கே கிட்ஸ்களுக்கு லவ் டுடே படம் மிகவும் பிடித்து சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது திரைப்படங்களுக்கு சென்று படங்களை பார்ப்பவர்களில் 90 சதவீதம் 2k கிட்ஸ் என்பதால் அவர்களின் பல்ஸை புரிந்து கொண்டு படமெடுக்கிறார் பிரதீப். அதன்பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தையும் 2கே கிட்ஸ்கள் கொண்டாடினார்கள்.
ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்கிற படத்திலும் பிரதீப் நடித்திருந்தார். காதல் கலந்த ஃபேண்டஸி படமான LIK தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில் அதே தேதியில் டியூட் படமும் வெளியானதால் தற்போது LIK ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
தீபாவளிக்கு வெளியான Dude: தற்போது கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த கடந்த 17ம் தேதி வெளியான Dude திரைப்படமும் அதே 2கே கிட்ஸ் களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. 2கே கிட்ஸ்கள் பல பெண்களை காதலிப்பார்கள், வாழ்க்கையை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் போன்ற பல விஷயங்களை காட்சிகளாக வைத்து Dude படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே இளைஞர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். 80களின் பாக்கியராஜ், 90களின் எஸ்.ஜே.சூர்யா, 2கே கிட்ஸ்களின் ஹீரோவாக இருந்த தனுஷ் ஆகியோரின் கலவையாக இருக்கிறார் பிரதீப். அதனால்தான் அவருக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக டியூட் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் 50 கோடி வசூலை தாண்டி விடும். எப்படியும் இப்படம் 100 கோடி வரை வசூல் செய்யும் என்கிறார்கள்.
2கே கிட்ஸ்களின் ஹீரோ: பிரதீப் ரங்கநாதன் ஒரு ஹீரோ மெட்டீரியல் இல்லை. இதை செய்தியாளர்களே அவரிடம் கேட்டபோது அவருக்கு சப்போர்ட்டாக மைக்கை வாங்கி பேசிய சரத்குமார் ‘இங்கு ஹீரோ என தனியாக யாருமில்லை. ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம்’ என்றார். உண்மைதான் 2கே கிட்ஸ்களின் ஹீரோவாக மாறியிருக்கிறார் பிரதீப்.
லவ் டுடே, டிராகன் ஆகிய வெற்றிகளைத் தொடர்ந்து இப்போது Dude படமும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். 2கே கிட்ஸ்கள் இவரை கொண்டாடுகிறார்கள் என்பதால் எப்படியும் இன்னும் பல வருடங்களுக்கு தாக்கு பிடிப்பார் என்றே நம்பலாம்.