Chatriyan: பழைய பன்னீர் செல்வமா வரணும்!... சத்ரியன் வெளியாகி 35 வருடங்கள்!...

விஜயகாந்த் நடித்து 1999ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி வெளியான திரைப்படம் சத்ரியன். விஜயகாந்த் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மணிரத்னம் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை கே.சுபாஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பானுப்பிரியா, ரேவதி, திலகன், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தனது மனைவியை வில்லன் கும்பல் குண்டு வைத்து கொன்று விட தனது குழந்தைகளுக்காக போலீஸ் வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் ஒரு தகப்பன், வில்லனாகிய திலகனை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கிற துடிப்பான போலீஸ் அதிகாரி என இரண்டு கதாபாத்திரங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார் விஜயகாந்த்.
அமைதியான மனைவியாக ரேவதியும், மனைவி இல்லாமல் தனித்து வாழும் விஜயகாந்தை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் துறுதுறுப்பான வேடத்தில் பானுப்பிரியாவும் சிறப்பாக நடித்திருந்தனர். மலையாள நடிகர் திலகன் இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். இந்த படம் வெற்றி பெற்றதற்கு திலகனின் நடிப்பு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தையும் அமைத்திருந்த முதல் திரைப்படம் சத்ரியன் என சொல்லலாம்.
அதேபோல் ஹீரோவுக்கு இணையாக வில்லனுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தால் அந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதற்கும் மிகப்பெரிய உதாரணமாக சத்ரியன் படம் இருக்கிறது. இந்த படத்தில் விஜயகாந்திடம் திலகன் பேசும் ‘நீ வரணும்.. பழைய பன்னீர்செல்வமா வரணும்’ என்கிற வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது..
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மறைந்த பாடகி ஸ்வர்ணலதா பாடியா ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாடல் இப்போது கேட்டாலும் இனிமைதான். இந்த படத்தின் ஒரு காட்சியில் இளையராஜா அமைத்த பின்னணி இசை ‘தன்னால் முடியாது’ என மனமுடைந்து விழுந்து கிடப்பவனையும் தட்டி எழுப்பும்.
அலட்டல் இல்லாமல், கத்தி பேசாமல் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருப்பார் திலகன். ஒரு பக்கம் அதிரடியான போலீஸ் அதிகாரியாக தீயாக நடித்திருப்பார் விஜயகாந்த். ‘சத்ரியனுக்கு சாவே கிடையாதுடா’ என விஜயகாந்த் பேசும் வசனம் அவருக்கு மட்டுமே பொருந்தும். கேப்டனாக இப்போதும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சத்ரியன் வெளியாகி 35 வருடங்கள் ஆகிவிட்டதை விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சத்ரியன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களில் மறக்க முடியாத திரைப்படமாக எப்போதும் இருக்கும். கேப்டன் பிரபாகரனை போல சத்ரியன் படத்தையும் ரீ-ரிலீஸ் செய்தால் இப்போதும் நல்ல வசூலை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை