சீரியஸான சீனை கலாய்த்த ரசிகர்கள்.. தியேட்டரை விட்டு ஓடிய இயக்குனர்… ஆனா அங்கதான் டிவிஸ்டு…
1959 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கல்யாண பரிசு”. இத்திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இயக்குனர் ஸ்ரீதரும் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“கல்யாண பரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு இயக்குனர் ஸ்ரீதர், படக்குழுவினருக்கு முழு திரைப்படத்தையும் திரையிட்டுக் காட்டினார். இத்திரைப்படத்தை முழுதாக பார்த்த தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு கிளைமேக்ஸ் காட்சி பிடிக்கவில்லை. இதனை ஸ்ரீதரிடம் கூறினார் கிருஷ்ணமூர்த்தி.
ஆனால் ஸ்ரீதரோ, இந்த கிளைமேக்ஸ்தான் நன்றாக இருக்கிறது என தனது வாதத்தை முன் வைத்தார். இதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுவாதம் வைக்க, அங்கிருந்தவர்கள் பலரும் ஒவ்வொரு அணியாக பிரிந்தனர். சிலர் கிருஷ்ணமூர்த்தி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு சிலர் ஸ்ரீதரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரு பக்கமும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீதர் ஒரு முடிவெடுத்தார். “இந்த கிளைமேக்ஸை வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் மீண்டும் வேறு மாதிரி படமாக்குவோம். இந்த படத்தின் பாதி பிரிண்டில் இப்போது எடுத்துள்ள கிளைமேக்ஸை இணைப்போம். மீதி பிரிண்டில் புதிதாக எடுக்கப்போற கிளைமேக்ஸை இணைப்போம். இதில் எந்த கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதோ அதனை முடிவு செய்துகொள்வோம்” என கூறினார்.
ஸ்ரீதர் இவ்வளவு நம்பிக்கையாக கூறிகிறாரே என்று எண்ணிய கிருஷ்ணமூர்த்தி, “இல்லை வேண்டாம், இந்த கிளைமேக்ஸே இருக்கட்டும்” என கூறிவிட்டார். இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களை கவரவேண்டும் என இத்திரைப்படம் வெளியாகும் வரை பல தெய்வங்களை வேண்டினாராம் ஸ்ரீதர்.
இதனை தொடர்ந்து “கல்யாண பரிசு” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்போது ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக முதல் நாள் சென்னை கேசினோ திரையரங்கத்திற்குச் சென்றார் ஸ்ரீதர்.
திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் கதாநாயகி தேம்பி தேம்பி அழுததை பார்த்த பார்வையாளர்களும் தேம்பி தேம்பி அழத்தொடங்கினர். அதாவது அவர்கள் அந்த காட்சியை கேலி செய்கிறார்கள் என ஸ்ரீதருக்கு தெரியவந்தது. அந்த நிமிடம் “கல்யாண பரிசு” திரைப்படம் ஃப்ளாப் என முடிவுசெய்து திரையரங்கத்தை விட்டு வெளிவந்துவிட்டாராம் ஸ்ரீதர்.
திரையரங்கை விட்டு வெளியே வந்த ஸ்ரீதரை பார்த்த அத்திரையரங்கத்தின் உரிமையாளர், “இந்த ஒரு காட்சியை வைத்து முடிவு செய்யவேண்டாம். எதற்கும் படம் முடியும் வரை காத்திருங்கள்” என கூறி அவரது அறையில் ஸ்ரீதரை உட்கார வைத்தார்.
ஆனால் ஸ்ரீதர் நினைத்ததற்கு மாறான ஒரு நிகழ்ச்சி அங்கே நடந்தது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்களுக்கு அத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதே போல் ஸ்ரீதர் பயந்துகொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.