கடைசி நேரத்தில் யோசித்த ஸ்ரீதர்!.. ஒரே நாளில் உருவான பாடல்... அட அந்த படத்துக்கா?..

by சிவா |   ( Updated:2023-06-10 08:31:44  )
CV Sridhar
X

CV Sridhar

கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல சிறந்த படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். அப்போது இருந்த இயக்குனர்களில் மிகவும் சிறந்தவராக இவர் கருதப்பட்டார். பல வெற்றிப்படங்களை இயக்கியவர். அப்போதெல்லாம் பெரும்பாலும் குடும்ப, செண்டிமெண்ட் நிறைந்த, சோகமான காட்சிகள் நிறைந்த படங்கள்தான் அதிகம் வரும். ஆனால், ஸ்ரீதர்தான் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற ஜாலியான படங்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

ஸ்ரீதர் அன்று துவங்கி வைத்த அந்த பாணியைத்தான் சுந்தர் சி போன்ற இயக்குனர்கள் இப்போது வரை பின்பற்றி வருகிறார்கள். எனவே, கமர்ஷியல் படங்களின் முன்னோடி ஸ்ரீதர்தான். இவரின் இயக்கத்தில் 1962ம் வருடம் வெளியான திரைப்படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்த படத்தில் கல்யாண் குமார், முத்துராமன், நாகேஷ், தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

C.V.Sridhar

C.V.Sridhar

கணவருக்கு சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வரும் ஒரு பெண் அந்த மருத்துவமனையில் தனது பழைய காதலனே மருத்துவராக இருப்பதை பார்க்கிறாள். மேலும், அவர் திருமணமே செய்து கொள்ளாமலும் வாழ்ந்து வருவதை கண்டு அவளை குற்ற உணர்ச்சி துளைக்கிறது. அந்த மருத்துவர் பழையதை மறந்துவிட்டு அந்த பெண்ணின் கணவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.

nenjil

இந்த படத்தில் கண்ணாதசன் அவ்வளவு அற்புதமான பாடல்களை எழுதியிருப்பார். இந்த படம் சென்சாருக்கு செல்ல தயாராக இருந்தது. அதற்கு முதல் நாள் இந்த படத்தில் மற்றொரு இனிமையான பாடலை இணைக்க வேண்டும் என ஸ்ரீதருக்கு யோசனை தோன்றியது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி மனதை மயக்கும் டியூனை உருவாக்கினர். உடனே, கண்ணதாசனை தேடினர். அவர் விமான நிலையத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தார். அழைத்தது ஸ்ரீதர் என்பதால் உடனே வந்து 15 நிமிடங்களில் பாடலை எழுதி கொடுத்தார். அதுதான் ‘முத்தான முத்தல்லவோ’ பாடல் ஆகும். பி.சுசிலா பாடி ரிக்கார்டிங் செய்தார்கள்.

nenjil

தேவிகா, நாகேஷ், குட்டி பத்மினி உடனடியாக வரவழைக்கப்பட்டார்கள். மருத்துவமனையில் சிறுமியாக இருக்கும் குட்டி பத்மினியிடம் தேவிகா இந்த பாடலை பாட நாகேஷ் சில சேஷ்டைகள் செய்து நடனமும் ஆடுவது போலவும் படமாக்கினார் ஸ்ரீதர். அதன்பின் லேப்புக்கு பிலிம் சுருளை அனுப்பி எடிட் செய்து படச்சுருளுடன் இணைந்து சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இது எல்லாமே ஒரே நாளில் நடந்துதுதான்.

Next Story