அந்த மாதிரி படத்துக்கு ஒப்பந்தம் செய்ய வந்த நண்பர்… மனம் உடைந்துப்போய் நின்ற சில்க் ஸ்மிதா…
1980-களில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த சில்க் ஸ்மிதா, படுபிசியான கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். தனது சினிமா பயணத்தில் மிகவும் குறைவான ஆட்களுடனே நெருங்கி பழகி வந்தவர் சில்க் ஸ்மிதா.
சில்க் ஸ்மிதா ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த நபரையே திருமணம் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும் பல செய்திகள் வலம் வந்தன. ஆனால் எதிர்பாராவிதமாக 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில்க் ஸ்மிதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்த மர்மம் இன்று வரை தொடரத்தான் செய்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல புகைப்படக் கலைஞரான ஸ்டில்ஸ் ரவி, சில்க் ஸ்மிதா குறித்தான பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
“சில்க் ஸ்மிதா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவரது எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் பலவற்றை நான் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அவர் என்னுடைய புகைப்படங்களுக்கு பெரிய ரசிகராக இருந்தார்.
சில்க் ஸ்மிதாவை வெளியில் இருந்து பார்ப்பதற்குத்தான் திமிர் பிடித்த பெண் போல் தெரியும். ஆனால் பழகிப்பார்த்தால் குழந்தை. அவரை யாராவது தப்பான கண்ணோட்டத்தோடு பார்த்தாலோ அல்லது யாராவது அவரிடம் தவறான முறையில் நடந்துகொள்வது போல் தெரிந்தாலோ அவர்களை விளாசி விடுவார். மற்றபடி அனைவரிடம் அன்பாக பேசக்கூடியவர் சில்க் ஸ்மிதா” என ஸ்டில்ஸ் ரவி அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் “நான் சில்க் ஸ்மிதாவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்காக அவரை அணுகினேன். அந்த படம் பாலியல் உறவு சம்பந்தப்பட்ட படம். உடனே அவர் எனது மனைவிக்கு தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ‘உங்கள் கணவரின் மிகப்பெரிய ரசிகன் நான். ஆனால் அவர் என்னை வைத்து அந்த மாதிரி ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் மேல் நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை வைத்து அப்படி ஒரு படம் எடுக்கவேண்டும் என்கிறார். நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவே மாட்டேன்’ என கூறியுள்ளார்.
அந்த அளவுக்கு என்மேல் மரியாதை வைத்திருந்தார் சில்க் ஸ்மிதா. எனது தாய்க்கு பிறகு சில்க் ஸ்மிதா இறந்தபோதுதான் நான் சுடுகாடு வரை சென்று காரியம் செய்யும் வரை இருந்தேன். அவரது மரணம் இன்று வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. நானும் அவர் மரணத்திற்கு விடைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.