சரத்பாபு நடிகராக மாறிய சம்பவம் : 5 நிமிஷத்துல ஹீரோவானது இவர்தான்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. கணீர் குரலில் ரசிகர்களை கவர்ந்தவர். மென்மையாக பேசும் குணம் உடையவர். அதனால், இவர் நடிக்கும் திரைப்படங்களிலும் அவரின் கதாபாத்திரங்கள் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவரின் சுபாவமே அதுதான்.
ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், முத்து, அண்ணாமலை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். டீசண்டான பணக்கார வேடம் எனில் இயக்குனர்கள் அழைப்பது இவரைத்தான்.
சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத்பாபு சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மறைவுக்கு நடிகர் ரஜினி உட்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் தனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசிய சரத்பாபு ‘நான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு சிங்கீதம் சீனிவாசராவ் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் வந்திருந்தனர். சீனிவாசராவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் இருந்தது. என்னை பார்த்து அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதன்பின் சீனிவாசராவ் என்னிடம் வந்து ‘உனக்கு பாலச்சந்தரை தெரியுமா?’ என கேட்டார். ‘அவரை எல்லோருக்கும் தெரியும். எனக்கும் தெரியும்’ என நான் சொன்னதும், பாலச்சந்தரிடம் என்னை அழைத்து சென்றார்.
அவர் என்னை பார்த்து ஒரேஒரு கேள்விதான் கேட்டார். ‘நீ நடிப்பியா?’ என கேட்டார். நான் ‘யெஸ் சார் நான் நடிப்பேன்’ என்றேன். அவ்வளவுதான் ‘நாளைக்கு என் ஆபிஸுக்கு வா. ‘நிழல் நிஜமாகிறது’ அப்படின்னு ஒரு படம் பண்றேன். நீதான் ஹீரோ’ என சொல்லிவிட்டார். இப்படித்தான் நான் நடிகராக மாறினேன்.