Connect with us

Cinema History

ஒரு படத்தோட வெற்றியைத் தீர்மானிக்கிறது எதுன்னு தெரியுமா? வெற்றிப்பட இயக்குனர் சொல்வதைக் கேளுங்க…!!!

ரசிகனின் ரசனையைத் தூண்டும் விதத்தில் அமையும்போது தான் ஒரு படம் வெற்றி அடைகிறது. அதற்கு எந்த இயக்குனரும் மறுப்பு சொல்ல முடியாது. சினிமா என்ற ஊடகத்தில் தனது கருத்தை வலிய திணிக்கும்போது அது ரசிகனுக்குப் பிடிக்காத பட்சத்தில் படம் தோல்வியைத் தழுவுகிறது.

அந்த வகையில் படம் வெற்றி பெற என்னென்ன முக்கிய அம்சங்கள் தேவை என பழம்பெரும் வெற்றிப்பட இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் என்னென்ன சொல்கிறார் என பார்ப்போமா…

என்னுடைய வாழ்க்கையில் பல காரணங்களுக்காக மறக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த படம் பத்ரகாளி. இந்தப் பெயர் வைத்தபோதே பலரும் மாற்றும்படி பயமுறுத்தினார்கள். பத்ரகாளி பயங்கரி என்றார்கள். நான் ஒரே அடி அடித்துவிட்டேன்.

Pathrakali2

என் தாய் ஒருக்காலும் எனக்குத் துரோகம் செய்ய மாட்டாள். சேலத்தை சேர்ந்த மகரிஷி என்பவர் எழுதிய குறுநாவல். திரைக்கதையாக வடிவமைத்தேன்.

படத்தின் துவக்கமே அதிர்ச்சியானது. எதிர்பாராதது. கோர்ட்டில் நீதிபதியானவர் சடங்குகளும் சம்பிரதாயங்களும் கணவன், மனைவி என்று சேர்த்து வைக்கிறது.

அதுதான் திருமணம். ஆனால் கோர்ட் சட்டம் சில சமயங்களில் அவர்களைப் பிரித்து விடுகிறது. நான் இவர்கள் விவாகத்தை ரத்து செய்து விவாகரத்து அளிக்கிறேன் என்று முடிப்பார்.

கணவன் சிவகுமார் கண்கள் கலங்கியிருக்கும். வெளியே வந்தவரை ஒரு வயோதிக தீட்சிதர் தடுத்து நிறுத்தி பழைய பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து சிவகுமாரிடம் காட்டி மாப்பிளே, நான் இன்னும் உங்களை அப்படிக் கூப்பிடலாமிலே…இது திருமணத்தின் போது நீங்களும் என் பொண்ணும் எடுத்துக் கொண்ட கல்யாண போட்டோ. இதை நானே வச்சிக்கிறேனே…என் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணமா செஞ்சிப் பார்க்கப் போறேன் என்பார்.

தீட்சிதராக மேஜர் சுந்தரராஜன் நடித்திருப்பார். அந்தப் போட்டோவில் சிவகுமாரும், ராணிசந்திராவும் சிரித்தபடி நிற்பார்கள். கண்ணில் நீர் வழிய, வைத்துக் கொள்ளுங்கள் என்று தலையாட்டி விட்டுச் சிவகுமார் போய் விடுவார்.

Director AC.Thirulogachandar

தன்வீட்டிற்கு வந்து நுழையக் கதவைத் தட்டுவார். கதவைச் சிரித்த முகத்துடன் திறப்பவர் விவாகரத்துப் பெற்ற அவர் மனைவி ராணிசந்திரா. எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதிர்ந்து போய் விடுவார் சிவகுமார்.

கள்ளம் கபடமில்லா அந்த வெகுளிப்பெண் கோர்ட்டுக்குப் போனேளே தீர்ப்பு நமக்குச் சாதகமாகத் தானே நடந்தது என்று கேட்பாள். அவர் என்ன பதில் சொல்வார்? வாங்கோ…கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு நடந்ததைச் சொல்லுங்க.

மாமி உங்க பிள்ளை வந்துவிட்டார்..என்று தன் மாமியாரையும் அழைப்பாள். தாயும் மகனும் கண்ணீர் பொங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். புதிராகவும், அதிர்ச்சியாகவும் அதே நேரம் கதையின் கருவையும் சொல்வது போன்ற ஒரு துவக்கம்.

என் படங்களில் எப்போதும் துவக்கத்துக்கு நான் ரொம்பவே மெனக்கெடுவேன். நான் சாதாரணமாக ஒரு புத்தகத்தைப் படிப்பதனால் கூட முதல் பாரா படித்த உடனேயே கதையில் எழுத்தாளனின் திறமையைத் தெரிந்து கொள்வேன். மேலே படிக்கலாமா, வேண்டாமா என்று தீர்மானித்து விடுவேன்.

துவக்கமே ஒரு முடிச்சாக அமைந்தால் படம் பார்க்கும் ரசிகர்களும் அந்த முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் நம்முடன் ஈடுபடுவார்கள். அதேபோல் இடைவேளை வருவதற்கு முன்பும் ஒரு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தி முடிச்சைப் போடுவேன்.

Pathrakali3

இடைவேளையின் போதும் மக்கள் அதைப்பற்றியே பேசிக்கொண்டு மக்கள் உள்ளே வர வேண்டும். இப்படி திரைக்கதை எழுதும்போது சில கண்டிசன்கள் போட்டுக்கொள்வேன்.

பத்ரகாளி படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் சின்ன படம். புதுக்கதாநாயகி. எனது அபிமான நடிகர் மேஜர் சுந்தரராஜன். அவர் தவறாமல் எல்லா படங்களிலும் இடம்பெற்றுவிடுவார்.

ஏ.சி.திருலோகசந்தர் 1976ல் பத்ரகாளி திரைப்படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. இந்தப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே கதாநாயகி ராணிசந்திரா விமான விபத்தில் உயிரிழந்தார்.

மீதமுள்ள படத்தை அவரைப் போலவே உருவமுள்ள புஷ்பா என்ற துணைநடிகையை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனந்த பைரவி, கண்ணன் ஒரு, ஓடுகின்றாள், ஒத்த ரூபா, கேட்டேளா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top