30 வருடங்களில் பல சூப்பர் ஹிட் படங்கள்!.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய சுந்தர்.சி!..

vadivelu sundar c
இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் சுந்தர் சி. மணிவண்னன் இயக்கிய வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களிலும் இவர் உதவி இயக்குனராக நடித்திருக்கிறார். இதில், சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
அருண் விஜய் அறிமுகமான முறை மாப்பிள்ளை படம்தான் சுந்தர்.சியின் முதல் படம். இந்த படத்தின் இறுதியில் தயாரிப்பாளரோடு பிரச்சனை ஏற்பட்டு சுந்தர்.சி விலகிவிட மீதி காட்சிகளை மணிவண்னன் இயக்கி கொடுத்தார். விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி அதில் அவர் நடிக்காமல் போல கதையை கொஞ்சம் மாற்றி கார்த்திக் - ரம்பாவை வைத்து உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் கார்த்திக் - ரம்பா கூட்டணியை வைத்தே நிறைய படங்களை இயக்கினார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்களே. ரஜினியை வைத்து அருணாச்சலம் இயக்கினார். அரசியல் ஆர்வத்தில் இருந்த ரஜினிக்கு இந்த படம் தொடக்கமாக இருந்தது. கமலை வைத்து அன்பே சிவம் எடுத்தார். படம் ஹிட் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் இந்த படம் எப்போதும் இருக்கும்.
தனது முதல் படத்திலிருந்தே காமெடியை தன் பலமாக பயன்படுத்தினார் சுந்தர்.சி. கவுண்டமணி,விவேக், வடிவேலு, சூரி, சந்தானம், யோகிபாபு என யார் பீக்கில் இருக்கிறார்களோ அவர்களை சரியாக தனது படங்களில் பயன்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைப்பார். சுந்தர்.சியின் இயக்கத்தில் கவுண்டமணி 11 படங்களில் நடித்திருக்கிறார். முறைமாமன் படத்தை இயக்கியபோது அப்படத்தில் நடித்த குஷ்புவிடம் தன் காதலை சொல்லி அவரையே திருமணம் செய்து கொண்டார் சுந்தர்.சி.
தன்னுடைய எல்லா படங்களிலும் கதாநாயகிகளுக்கு இந்து என்று பெயர் வைப்பார். சுந்தர்.சி இயக்கிய கிரி, வின்னர், ரெண்டு, லண்டன், தலைநகரின் மறுபக்கம் போன்ற படங்களில் வடிவேலுவின் காமெடி ஹைலைட்டாக இருந்தது. இப்போது மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. கடந்த 10 வருடங்களாகவே சினிமாவில் நடிக்க துவங்கி அதிலும் ஹிட் கொடுத்து வருகிறார்.

நான் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. நான் இயக்கியதில் 95 சதவீத படங்கள் வெற்றிப்படங்கள். ஆனால், பெரிய இயக்குனர்களின் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை என மதகஜராஜா பட வெற்றி விழாவில் மிகவும் வருத்தத்தோடு பேசியிருந்தார் சுந்தர்.சி. அவர் அப்படி பேசியதில் உண்மை இருக்கிறது. ஷங்கர் போன்ற இயக்குனர்கள் 200 கோடி பட்ஜெட்டில் படமெடுத்து பிளாப் கொடுக்கிறார்கள். கேம் சேஞ்சர் படத்தில் பாட்டுக்கு மட்டும் 75 கோடி செலவு செய்தார் ஷங்கர். இந்த பணத்தை சுந்தர்.சியிடம் கொடுத்திருந்தால் 4 படங்களை எடுத்து தயாரிப்பாளருக்கு 200 கோடி லாபம் கொடுத்திருப்பார்.
ஷங்கரின் கேம் சேஞ்சர் தோல்வி அடைந்தபோது சுந்தர்.சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜராஜா படம் ஹிட் அடித்தது. ரசிகர்களை புரிந்த இயக்குனராக சுந்தர்.சி. இருக்கிறார் என்பதே இதுவே சாட்சி. மற்ற இயக்குனர்களை ஒப்பிட்டால் சுந்தர்.சி எவ்வளவோ சிறந்த இயக்குனர் என்பது புரியும். குறைந்த பட்ஜெட், குறைந்த நாட்கள் படப்பிடிப்பு, அதேநேரம் தயாரிப்பாளருக்கு அதிக லாபம் என பயணித்து வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் இப்போதுள்ள பல இயக்குனர்களும் சுந்தர்.சி யிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சுந்தர் சி படமென்றால் குடும்பத்துடன் சென்று ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்கிற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது. இதுவே, அவரின் வெற்றி. ஆனால், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்களைத்தான் பெரிய இயக்குனர்களாக சினிமா உலகம் பேசுகிறது. சரியாக சொல்ல வேண்டுமெனில் தமிழ் சினிமா கொண்டாட தவறிய இயக்குனராகவே சுந்தர்.சி இருக்கிறார்.