தப்பா டைட்டில் வச்சிட்டேன்!. மாத்தவும் முடியல!.. சுந்தர்.சி சொல்றத கேளுங்க!….

by சிவா |   ( Updated:2025-04-21 22:00:54  )
gangers
X

Gangers: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி. பரபர ஆக்‌ஷன், கருத்து சொல்வது, மக்களுக்கு அறிவுரை சொல்வது, சாதி, மத பிரச்சனைகள் பற்றி பேசுவது, பெரிய ஹீரோக்களை வைத்து மாஸ் மற்றும் ஹீரோயிச படங்களை எடுப்பது என எதுவும் செய்யாமல் காதல் கலந்த காமெடி படங்களை மட்டும் எடுத்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர்தான் சுந்தர்.சி.

நம்மை நம்பி வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் ஜாலியாக சிரித்துவிட்டு போக வேண்டும் என்று மட்டுமே நினைக்கும் இயக்குனர் இவர். ஃபேமிலி ஆடியன்ஸும், குழந்தைகளும் என் படம் பார்க்க வருகிறார்கள். அதனால், என் படங்களில் கதாநாயகிகள் கிளாமராக இருந்தாலும் ஆபாசமாக காட்டமாட்டேன் என சொன்னவர் இவர்.

30 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களை இயக்கி வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, அரண்மனை என தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் இவர். காமெடி மட்டும் என இல்லாமல் கமல் - மாதவனை வைத்து அன்பே சிவம் படத்தையும் இயக்கினார்.

இப்போது வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் படத்தை முடித்துவிட்டு மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஒரு படம் முடிந்ததும் உடனே அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் அவர். கேங்கர்ஸ் திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. பல வருடங்களுக்கு பின் சுந்தர் சியும், வடிவேலும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி ‘உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது கார்த்திக் சார் என்னிடம் ‘எதுக்காக இந்த டைட்டில்?’ என கேட்டார். உங்க அப்பா முத்துராமன் சார் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தில் ‘உள்ளத்தை அள்ளி கொஞ்சம் தா தா’ என ஒரு பாடல் வரும். அதிலிருந்து சுட்டு இந்த படத்திற்கு தலைப்பு வைத்தேன் என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே ‘பாஸ். அது நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா’ என சொன்னார். ஐய்யயோ தலைப்பை தப்பா வச்சிட்டேனே.. எல்லாம் அறிவிச்சாச்சி. இனிமே மாத்தவும் முடியாது என பதறிவிட்டேன். அப்படி தப்பா தலைப்பு வச்சி வெளியான படம் சூப்பர் ஹிட் ஆனது. அதுபோல கேங்கர்ஸ் என்கிற வார்த்தையே இல்லை. வடிவேலு அண்ணன்தான் இத சொன்னார். நல்லாருக்கேன்னு வச்சிட்டேன். இதுவும் ஹிட் அடிக்கும்னு நம்புறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story