கேங்கர்ஸ் படம் ஹிட்!.. சுந்தர்,சி அடுத்து இயக்கப்போகும் 4 திரைப்படங்கள்!..

பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்தை துவங்குவதற்கு முன் பல மாதங்களை எடுத்துக்கொள்வார். ஆனால், தமிழ் சினிமாவில் இடைவெளியே விடாமல் தொடர்ந்து படங்களை இயக்கிக்கொண்டே இருக்கும் இயக்குனர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சுந்தர் சி மட்டுமே. இவரின் ஒரு படம் ரிலீஸாகும் தேதியில் அடுத்த படத்தின் ஷுட்டிங்கில் இருப்பார் சுந்தர்.சி.
ரஜினியை வைத்து அவர் இயக்கிய அருணாச்சலம் படம் வெளியானபோது சரத்குமாரை வைத்து ஜானகிராமன் திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். எனவேதான், தொடர்ந்து இவரின் படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கும். 3 மாதங்களில் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார். குறைவான பட்ஜெட்டில், குறைவான நாட்களில் படமெடுத்து ஹிட் கொடுக்கும் இயக்குனர் இவர்.
கடந்த சில வருடங்களாக அவர் இயக்கும் படங்களை அவரே தயாரித்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, அரண்மனை 4 பாகங்கள் என எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான். சுந்தர்.சி இயக்கத்தில் மட்டுமல்ல, பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்கவும் துவங்கிவிட்டார். அதில் பல படங்கள் வெற்றி பெற்றது.

சுந்தர் சி பல பல படங்களை இயக்கியிருந்தாலும் வடிவேலுவை வைத்து அவர் இயக்கிய வின்னர் படத்தில் காமெடி அசத்தலாக அமைந்திருந்தது. வடிவேலுவின் காமெடிகளில் இந்த படம் ஹைலைட் என்றே சொல்லலாம். அதேபோல், சுந்தர் சி ஹீரோவாக நடித்த தலைநகரம் படத்திலும் காமெடி சிறப்பாக இருந்தது.
15 வருடங்களுக்கு பின் இப்போது கேங்கர்ஸ் படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் காமெடி ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் 2ம் பாகத்தில் வரும் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது. இந்த படத்திற்கு பின் சுந்தர்.சி 4 படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதில், அம்மனாக நயன்தாரா நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அரண்மனை 5, கலகலப்பு 3 ஆகிய படங்களை இயக்கவுள்ளார். அதன்பின் அவர் ஏற்கனவே எடுக்க திட்டமிட்டிருந்த சங்கமித்ரா படத்தை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறார். சங்கமித்ரா ஒரு சரித்திர கதை கொண்ட படமாகும். பல வருடங்களுக்கு முன்பே இந்த படத்தை எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.