500,1000 கோடியெல்லாம் சும்மா!.. நடிகர்களை போட்டு பொளக்கும் சுந்தர்.சி…

இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே ரிலீஸாகும் முன்பே 300 கோடி தயாரிப்பாளருக்கு டேபிள் பிராபிட் என்றெல்லாம் பேச துவங்கிவிடுகிறார்கள். அதிலும், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இவ்வளவு கோடி பட்ஜெட். அவருக்கு இவ்வளவு கோடி சம்பளம், ஓடிடி மட்டும் இவ்வளவு கோடி, சேட்டிலைட் ரைட்ஸ் இவ்வளவு கோடி, தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் இவ்வளவு கோடி என அடித்துவிடுவார்கள்.
அதேபோல், படம் வெளியான அன்றே அப்படம் 100 கோடி வசூல் செய்துவிட்டது என ரசிகர்களே அடித்துவிடுவார்கள். ரசிகர்கள் அதை செய்யவில்லை எனில் மூவி டிராக்கர்ஸ் என்கிற பெயரில் சிலர் இது போன்ற பொய்யான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வார்கள். அது உண்மை என நம்பி ரசிகர்களும் அந்த தகவலை பகிர்வார்கள்.
உண்மையில் ஒரு படத்தின் பட்ஜெட் என்ன?. நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்ன?.. முதல் நாள் வசூல் எவ்வளவு? படம் லாபமா?.. நஷ்டமா? என்கிற எல்லா விபரங்களும் தயாரிப்பாளருக்கே தெரியும். சில சமயம் தயாரிப்பாளர்களே கூட பொய்யான தகவலை பரப்புவதும் உண்டு. ஏனெனில், அப்போதுதான் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம்.

அதிலும், 500 கோடி வசூல், 1000 கோடி வசூல் என அடித்து விடுவார்கள். இதையெல்லாம் உண்மை என ரசிகர்களும் நம்புவார்கள். இப்படி ஒரு படத்தின் மீது ஒரு போலி உருவத்தை ஆள் வைத்து கூட பரப்புகிறார்கள் சில தயாரிப்பாளர்கள். இந்நிலையில்தான் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் சுந்தர்.சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
500 கோடி 1000 கோடி வசூல் என சொல்வதெல்லாம் சும்மா. அது ஒரு விளம்பரத்திற்காகத்தான். எவ்வளவு தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்காங்கன்னு எனக்கு தெரியும். அப்படி போடலனா அந்த ஹீரோவுக்கு படம் கிடைக்காது. ஒரு லிட்டர் கேனில் ஒரு லிட்டர் பால்தான் ஊத்த முடியும். அதுல 10 லிட்டர் ஊத்திட்டேன்னு சொன்னா எப்படி நம்ப முடியும். நம்மளோட மார்க்கெட் அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை படம் மக்களுக்கு பிடிச்சிருந்தா அதுவே போதும். மத்தபடி நம்பர் கேம் எல்லாம் சுத்த பொய்’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்குனர் மட்டுமில்லை. அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. கடந்த சில வருடங்களாக அவர் இயக்கும் படங்களை அவரே தயாரித்தும் வருகிறார். அவர் தயாரித்து இயக்கி நடித்து உருவான கேங்கர்ஸ் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.