நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணமே கமல்தான்!. சுந்தர்.சிக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!?!..

Sundar C: முறைமாமன் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர் சுந்தர்.சி. இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் இவர். காதல் கலந்த காமெடி படங்களை எடுத்து தொடர் ஹிட் கொடுக்கும் இயக்குனர் இவர். 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறார். இவரின் 98 சதவீத திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.
இவரின் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு என அப்போது காமெடியில் யார் பீக்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்து அகதளம் செய்துவிடுவார். இவர் இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, ரம்பா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.
பல ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் படத்தில் நடிக்கவும் துவங்கினார். இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இவர் இயக்கி நடித்து வெளியான அரண்மனை 4 பாகங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும், வடிவேலுவுடன் இணைந்து கேங்கர்ஸ் என்கிற படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். நான் சினிமாவுக்கு வந்ததுக்கும், இப்ப சினிமாவுல இருக்குறதுக்கும் காரணமே கமல் சார்தான். சலங்கை ஒலி படத்தில் கமல் நடனம் எப்படி இருக்க வேண்டும் என ஒரு பெண்ணிடம் ஆடிக்காட்டும் காட்சி என்னை என்னவோ செய்தது. அதுதான் சினிமாவுக்குள் போக வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்யும் காட்சி துவங்கி எல்லா காட்சிகளிலுமே ஒரு காட்சியோடு மற்ற காட்சிக்கு தொடர்பு இருக்கும். அதாவது அடுத்த காட்சிக்கு முந்தைய காட்சி லீடாக இருக்கும். இந்த பார்முலாவைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அதேபோல், கமல் சாரின் பேசும்படம் படமும் எனக்கு மிகவும் பிடிக்கும். பேசாமலேயே காமெடி செய்ய முடியும் என அப்படத்தில் கமல் காட்டியிருந்தார். நான் கமல் சாரின் தீவிர ரசிகர்’ என சொல்லியிருக்கிறார்.