அன்பே சிவம் படத்தால எனக்கு நிறைய நல்லது நடந்திருக்கு!.. இப்ப சொல்றேன்!.. சுந்தர்.சி நெகிழ்ச்சி!..

by சிவா |   ( Updated:2024-05-05 12:19:27  )
sundar c
X

சினிமாவில் இரண்டு வகையான படங்கள் உண்டு. ஒன்று கலைப்படங்கள். அதாவது சிறந்த கதை, நடிப்பு என விமர்சகர்களால் கொண்டாடப்படும். நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களால் அந்த படங்கள் பேசப்படும். ஆனால், தியேட்டரில் கூட்டம் இருக்காது. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். அதேநேரம், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற படங்கள் இதில் விதிவிலக்கு.

இரண்டாவது, காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி, சண்டைக்காட்சிகள் நிறைந்த மசாலா திரைப்படங்கள். நல்ல சினிமா விரும்பிகளுக்கு இப்படங்கள் பிடிக்காது. ஆனால், தியேட்டரில் கூட்டம் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை கொடுக்கும். இதில் முதல் வகையை சேர்ந்த கலைப்படம்தான் கமல் - மாதவன் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான அன்பே சிவம் திரைப்படம்.

இதையும் படிங்க: தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல் எழுத காமெடி படங்களை இயக்கிவந்த சுந்தர் சி இப்படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு தியேட்டரில் கூட்டம் இல்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டமே ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை இப்படத்தை பலரும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர் சி ‘அன்பே சிவம் எனது சினிமா வாழ்வில் முக்கியமான படம். அப்படம் வெற்றியை பெறவில்லை. ஆனால், எனக்கு பல நல்லது நடந்திருக்கிறது. இப்படத்தை முடித்தபின் கமல் என்னிடம் ‘நாம் ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறோம். நல்லதே நடக்கும் என சொன்னார்’ அவர் சொன்ன படியே நடந்தது.

என் மகளை பள்ளியில் சேர்க்க நானும், என் மனைவி குஷ்புவும் சென்றோம். அது ஒரு பெரிய பள்ளி. கடைசி நேரத்தில் போனதால் சீட் இல்லை என சொல்லிவிட்டார்கள். ஆனால், ‘சம்பிரதாயத்துக்காக பிரின்சிபலை சந்தித்து பேசிவிட்டு செல்லுங்கள். அடுத்த வருடம் சீட் கிடைக்கும்’ என சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், குஷ்பு என்னை அழைத்துகொண்டு போனார்.

இதையும் படிங்க: அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

அந்த பிரின்சிபில் ஒரு வட மாநிலத்தை சேர்ந்தவர். எங்கள் இருவரையும் யாரென்றே அவருக்கு தெரியவில்லை. நாங்கள் சினிமா பிரபலம் என அவருக்கு சொல்லி இருந்ததால் சினிமாவை பற்றி பேச துவங்கினார். சமீபத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர்’ என்கிற படம் பார்த்தேன். அதுபோல ஏன் தமிழ் சினிமாவில் படங்கள் வருவதில்லை. அன்பே சிவம் என்கிற ஒரு தமிழ் படம் பார்த்தேன். அற்புதமாக இருந்தது என சொல்ல, அருகிலிருந்த குஷ்பு ‘மேம் அப்படத்தின் இயக்குனர் இவர்தான்’ என சொல்ல அவருக்கோ ஆச்சர்யம்.

‘நீங்களா அன்பே சிவம் படத்தின் இயக்குனர்?.. உங்களுக்கு சீட் இல்லை என யார் சொன்னது?’ என சொல்லி உடனே என் பொண்ணுக்கு சீட் கொடுத்தார். அப்போதுதான் கமல் சார் என்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தேன். அதோடு, கற்றறிந்த சபைகளுக்கு நான் போகும்போதெல்லாம் என்னை பெருமைப்படுத்துவது அன்பே சிவம் படம்தான். அந்த வகையில் அப்படம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்’ என நெகிழ்ச்சியுடன் சொன்னார் சுந்தர் சி.

Next Story