மீண்டும் உருவாகும் சுந்தர்.சி-ன் பிரம்மாண்ட பிராஜக்ட்… எல்லாம் மணிரத்னம் பண்ண வேலைதான்…
கடந்த 2018 ஆம் ஆண்டு சுந்தர்.சி “சங்கமித்ரா” என்ற பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. மேலும் இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா, திசா படானி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. குறிப்பாக இத்திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இவ்வாறு பல சூடான அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், திடீரென இத்திரைப்படத்தின் பணிகள் அப்படியே முடங்கின. சில பொருளாதாரக் காரணங்களால் இத்திரைப்படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் “சங்கமித்ரா” திரைப்படம் மீண்டும் உருவாக உள்ளதாக ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் தமிழ்குமரன் பிறந்தநாள் விழாவில் சுந்தர்.சி கலந்துகொண்டாராம். அப்போது “சங்கமித்ரா” திரைப்படத்தை மீண்டும் உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாம். ஆதலால் “சங்கமித்ரா” திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைக்கா நிறுவனம் மணிரத்னத்துடன் இணைந்து தயாரித்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதனால் வரலாற்றுத் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் கூட “வேள்பாரி” நாவலை திரைப்படமாக இயக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் “சங்கமித்ரா” திரைப்படமும் உருவாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.