சந்தானம்லாம் வேறலெவல்! சான்சே இல்ல!.. சுந்தர்.சி சொல்றத கேட்டா ஆச்சர்யமா இருக்கே!…

Actor Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். ஏற்கனவே வெற்றி பெற்ற தமிழ் படங்களை Spoof செய்து நக்கலடிப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதன்பின் விஜய் டிவியில் சில காமெடி நிகழ்ச்சிகளில் இருந்தார் சந்தானம்.
லொள்ளு சபா பார்த்துவிட்டு சந்தானத்தை தனது மன்மதன் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சிம்பு. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். கவுண்டமணி ஃபீல்டை விட்டு ஒதுங்கி இருந்த நேரம் சந்தானம் அந்த இடத்தை பிடிக்க முயற்சி செய்தார். அதனால், கவுண்டமணியின் நக்கல் மற்றும் கவுண்ட்டர் அடிக்கும் ஸ்டைலையே தனது ஸ்டைலாக வைத்துக்கொண்டார்.
அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறி படத்தின் ஹீரோவோடு வரும் இரண்டாவது ஹீரோ போல மாறினார். பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்தார். அப்படி அவர் நடித்த பல படங்களில் தில்லுக்கு துட்டு படம் மட்டுமே தேறியது. மற்றதெல்லாம் சுமாராக ஓடியது. தற்போது தமிழ் சினிமாவில் காமெடிக்கான பஞ்சம் நிலவுகிறது. எனவே, சந்தானம் மீண்டும் காமெடி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையாக இருக்கிறது.
இப்போது சந்தானம் தனது முடிவை கொஞ்சம் மாற்றியிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி. ‘சந்தானமெல்லாம் வேறவெவல். என் உதவி இயக்குனர்களை நச்சரித்து அடுத்த நாள் எடுக்கும் காட்சி தொடர்பான சீன் பேப்பரை வாங்கி கொள்வார். அவருக்கு ஒரு டீம் இருக்கு. அவர்களிடம் அந்த காட்சியை விவரித்து காமெடி எழுத சொல்வார். அதை வாங்கி அதிலிருந்து பெஸ்ட்டை எடுத்து காட்சிகளை உருவாக்குவார். அதை அடுத்தநாள் என்னிடம் வந்து கொடுத்து ‘இப்படி செய்யலாமா சார்?’ என கேட்பார்.
அதேபோல், அவருடன் இன்னொரு காமெடி நடிகர் நடிக்கிறார், உதாரணத்திற்கு மனோபாலா வந்தால் உடனே தனது டீமுக்கு போன் போடுவார். மனோபாலா என்ன டிரெஸ் போட்டிருக்கார் என்பதை கூட சொல்வார். மனோபாலாவுக்கு ஏற்கனவே சில வசனங்களை அவரின் டீம் வைத்திருப்பார்கள். அதை காட்சியில் பேசி அசத்திவிடுவார். இது எல்லாம் 5 நிமிட இடைவெளியில் நடந்துவிடும். அவ்வளவு உழைப்பை கொடுப்பார். செய்யும் வேலையில் சந்தானத்தின் மெனக்கெடல் என்னை ஆச்சர்யப்படுத்தியது’ என பேசியிருந்தார்.
சுந்தர்.சி இயக்கிய மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை போன்ற படங்களில் சந்தானம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.