இளையராஜா போட்ட கண்டிஷன்.. தெறித்து ஓடிய இயக்குனர்கள்.. சாதித்து காட்டிய சுந்தர்ராஜன்..
திரையுலகில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இளையாராஜா. இவரின் பாடல்கள் கிடைத்தாலே படம் வெற்றி என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நினைத்த காலமுண்டு. இளையராஜா இசையமைத்தாலே போதும், சாதாரண கதை கூட வெற்றி பெற்றது. 80,90 களில் தமிழ் சினிமாவில் இவரின் ராஜ்ஜியம்தான் இருந்தது.
பொதுவாக ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் எனில் அந்த படத்திற்கு எத்தனை பாடல்கள் வேண்டும்?.. என்ன மாதிரியான பாடல்கள் வேண்டும் என இயக்குனர் சொல்வார். இளையராஜா டியூன் போட்டு காட்டுவார். அது இயக்குனருக்கு பிடித்துவிட்டால் அது பாடலாக மாறும். சில படங்களுக்கு இளையராஜா போடுவதுதான் டியூன். அவர் என்ன டியூன் போட்டாலும் அதை ஓகே செய்த இயக்குனர்களும் உண்டு. ஒரே நாளில் பல படங்களுக்கு இசையமைத்து விடுவார் இளையராஜா.
ஒருமுறை இளையராஜா ஏழு ட்யூன்களை போட்டார். அந்த ஏழு பாடல்களையும் ஒரே படத்தில் பயன்படுத்த வேண்டும். அந்த பாடல்களுக்கு ஏற்றமாதிரி ஒரு கதையை உருவாக்க வேண்டும். அதற்கு சம்மதம் எனில் இந்த ஏழு டியூன்களையும் கொடுக்கிறேன். இயக்குனர்களில் யார் தயாராக இருக்கிறீர்கள்? என கேட்டார். இந்த செய்தி திரையுலகில் பரவியது. ஆனால், ஒருத்தரும் முன்வரவில்லை.
ஆனால், ஆர்.சுந்தர்ராஜன் அந்த சவாலை ஏற்றார். அந்த ஏழு டியூன்களுக்கும் ஏற்றது போல் ஒரு கதையை உருவாக்கினார். அதுதான் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’. இந்த படம் 1984ம் வருடம் வெளியாகி சில்வர் ஜூப்ளி படமாகவும் அமைந்தது.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய பெரும்பாலான படங்களில் இளையராஜாவே இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.