
Cinema History
ஒரு படம் நடிக்க வாய்ப்பு கொடுங்க…இன்னொரு படம் ப்ரீ…என விளம்பரப்படுத்தி வாய்ப்பு தேடிய பிரபல காமெடி நடிகர்
வழுக்கைத்தலை, சப்பட்டையான முகம், நல்ல குரல் வளம் என்று வித்தியாசமான கோணத்தில் உள்ள எம்.எஸ்.பாஸ்கரைப் பார்த்தால் இவருக்கெல்லாம் எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணத் தோன்றும்? இந்தக் கேள்விக்கு பதில் தொடர்ந்து படித்தால் கிடைக்கும்.
தமிழ்சினிமா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாத மிகச்சிறந்த நடிகர்களுள் இவரும் ஒருவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். அவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் ஆர்டிஸ்ட், சீரியல் ஆர்டிஸ்ட், நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்திறன் கொண்டவர் இவர்.

MS.Baskar
முத்துப்பாண்டி சோமசுந்தரம் பாஸ்கர் என்பதன் சுருக்கமே எம்.எஸ்.பாஸ்கர். இவர் 13.9.1957ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்துப்பேட்டை. இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினம் தான். ஹேமமாலினி, தாரா என இரு அக்கா உள்ளனர்.
இவர்களில் ஹேமமாலினி தமிழ்சினிமாவிலும், தாரா பாலிவுட்டிலும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உள்ளனர். பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்திலும், பிகாம் பட்டப்படிப்பை சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் முடித்தார். சின்னவயதில் இருந்தே நடிப்பின் மீது தீராதக்காதல் கொண்டவர். சென்னையில் உள்ள சொசைட்டி பார் நியூ டிராமா என்ற நாடகக் குழுவில் இணைந்து தனது நடிப்புத் திறமையை வளர்த்தார்.
தொடக்கத்தில் பாஸ்கர் டூத் பேஸ்ட் கம்பெனியின் விற்பனையாளராகவும், எல்ஐசி ஏஜெண்டாகவும் வேலை செய்தார். சினிமாவில் இவர் வாய்ப்புத் தேடி அலைந்த போது அவரது உருவத்தைக் கண்டு இவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.
சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தான் சினிமாத்துறையிலேயே ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும் என்று திடமாக எண்ணினார். அதன்படி தனது அக்கா ஹேமமாலினி மூலமாக சினிமாத்துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்தார். பல தமிழ்ப்படங்களுக்கும், டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு மற்றும் ஆங்கிலப்படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

ms baskar
இவர் முதன்முதலில் நடித்த படம் புனித மலர். ஆனால் இது கடைசிவரை வெளியாகவில்லை. அடுத்ததாக சம்சாரம் அது மின்சாரம் படம் உள்பட நடிகர் விசுவின் ஒருசில படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பின்னர் விசு இயக்கிய திருமதி ஒரு வெகுமதி படத்தில் கல்லூரி மாணவனாக அறிமுகமானார்.
அதன்பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது. அதன்பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்த பாஸ்கர் ஒரு பிளான் செய்தார். ஒரு படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் இன்னொரு படத்திற்கு இலவசமாக நடித்துத் தருகிறேன் என்றார். அப்படியும் எந்த வாய்ப்பும் வரவில்லை. தொடர்ந்து தூர்தர்ஷனில் நம்குடும்பம், விழுதுகள் தொடர்களில் நடித்து வந்தார்.
பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பான மாயாவி மாரீசன் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அலைகள், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ராதிகாவின் செல்வி, அரசியல் போன்ற சீரியல்களில் வில்லனாகவும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி கதாபாத்திரத்திலும் நடித்து தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தினார். இதன்மூலம்தாய்க்குலங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

ms baskar
சீரியலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜயின் தமிழன் படத்தில் பயணிகளிடம் எரிந்து விழும் கண்டக்டர் வேடம் கிடைத்தது. விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் குடிகாரன் வேடத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவருக்குத் தொடர்ந்து படவாய்ப்புகள் வரத்தொடங்கின.
இயக்குனர் ராதாமோகனின் மொழி படத்தில் ஆரம்பத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து நம்மை சிரிக்க வைத்தார். பின்பு தனது மகன் இறந்ததைச் சொல்லி அழ வைத்தார். அற்புதமான நடிப்பு அது. அதே போல் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், திருப்பாச்சி, அரிமா நம்பி, தெய்வத்திருமகள், 8 தோட்டாக்கள், பாபநாசம், காற்றின் மொழி, துப்பாக்கி என பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெளுத்து வாங்கினார்.

ms baskar
இதுவரை எவ்வித சோகமான காட்சியிலும் கிளிசரின் பயன்படுத்தியதில்லை என்கிறார். இவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கரும் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான். கடவுள் இருக்கான் குமாரு, நிமிர், காளி என 20க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதே போல இவரது மகன் ஆதித்யா பாஸ்கரும் விஜய்சேதுபதியின் 96 படத்தில் சிறுவயது விஜய்சேதுபதி கேரக்டரில் நடித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி என அனைத்து வட்டார மொழிகளிலும் பேசுவதில் வல்லவர் எம்.எஸ்.பாஸ்கர். மேலும் மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு என பலமொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். இதுவரை அவருக்கு மொழி மற்றும் 8 தோட்டாக்கள் என இரு படங்களுக்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது.