நெஞ்சம் நிறைந்த தாய்ப்பாசம் கொண்ட பாடல்களுடன் வெளியான தமிழ்ப்படங்கள்....இது சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்
தமிழ்சினிமாவில் அம்மா என்றால் கவிஞர்களுக்கு பாடல்கள் மழை போல் பொழிந்து விடுகின்றன. அவை எல்லாவற்றிற்கும் காரணம் அன்பு தான். அப்படிப்பட்ட அன்பின் திரு உருவம் தான் அம்மா.
இப்போது அம்மாவின் பெருமையை பறைசாற்றும் பாடல்கள் அதிலும் சூப்பர்ஸ்டார் படப்பாடல்கள் என்றால் ரசிகர்கள் ரசிக்காமல் இருப்பார்களா...அந்தப் பாடல்களே அப்படத்தின் வெற்றிக்கும் காரணமாகி விட்டன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
உழைப்பாளி
1993ல் வெளியான இந்தப் படத்தின் இயக்குனர் பி.வாசு. உழைப்பாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும் அவர்கள் சந்திக்கும் விதத்தையும் வெகு அழகாக எடுத்துக்கூறிய படம். இந்தப் படத்தில் ரஜினியின் அம்மாவாக சுஜாதா வருகிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரோஜா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் அந்த அம்மா அம்மா எந்தன் ஆருயிரே என்ற பாடல் கல்போன்ற மனதையும் கரைய வைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உருக உருக பாடியிருப்பார்.
மன்னன்
1992ல் வெளியான இந்தப் படத்தையும் பி.வாசு தான் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், பிரபு, விஜயசாந்தி, குஷ்பூ, கவுண்டமணி, விசு, மனோரமா, பண்டரிபாய், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினியின் அம்மாவாக பண்டரிபாய் வருகிறார்.
இளையராஜாவின் இன்னிசை படத்திற்கு பிளஸ். அதிலும் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம். அப்படி ஒரு மெலடி. கே.ஜே.யேசுதாஸின் காந்தக்குரல் இந்தப் பாடலை மெய்மறந்து கேட்கச் செய்கிறது.
மாவீரன்
1986ல் ராஜசேகரின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினியின் அம்மாவாக சுஜாதா வருகிறார்.
அவருடைய வருகைக்காக ரஜினி படத்தின் கிளைமாக்ஸில் பாடும் பாடல். செம சாங்...இது. அம்மா... சொந்தமில்லை பந்தமில்லை என்ற இந்தப் பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன். பாடலின் வரிகளும் செம சூப்பர். எழுதியவர் வாலி.
தளபதி
1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் தளபதி. ரஜினி, மம்முட்டி, ஷோபனா, அரவிந்த் சாமி, பானுப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் தெறிக்க விட்டன. இந்தப் படத்தில் ரஜினியின் அம்மாவாக ஸ்ரீவித்யா வருகிறார்.
அதிலும் குறிப்பாக அம்மா சென்டிமென்ட் பாடலான சின்னத்தாயவள் தந்த ராசாவே...என்ற பாடல் படத்தில் திரும்ப திரும்ப வந்து நம் மனதை வருடச் செய்யும். எஸ்.ஜானகியின் இதமான குரல் பாடலுக்கு மெருகூட்டியுள்ளது. வாலியின் வைர வரிகள் பாடலுக்கு பலம் சேர்த்தன.