பழம் நீயப்பா... ஞானப்பழம் நீயப்பா... தமிழ் ஞானப்பழம் நீயப்பா.... முருகனின் மகிமைகளை சித்தரிக்கும் படங்கள்

by sankaran v |   ( Updated:2023-02-05 03:30:36  )
பழம் நீயப்பா... ஞானப்பழம் நீயப்பா... தமிழ் ஞானப்பழம் நீயப்பா.... முருகனின் மகிமைகளை சித்தரிக்கும் படங்கள்
X

Dehivam

இன்று தைப்பூசத் திருவிழா உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் தான் இந்த விழாவின் கதாநாயகன். தமிழர்கள் குடியிருக்கும் இடமெல்லாம் முருகருக்கும் தனி இடம் உண்டு.

பாரம்பரிய வழிபாடுகளில் மிக முக்கியமான வழிபாடு முருகன் வழிபாடு. கேட்டதைக் கேட்டபடி கொடுப்பார் முருகர். சினிமாவில் முருகனின் பெருமைகளை விளக்கிச் சொல்லும் படங்களைப் பட்டியலிடுவோமா....

கந்தன் கருணை

Kandhan karunai

1967ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியானது. கந்தன் கருணையில் சிவாஜி கணேசன், சாவித்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முருகனின் அற்புதமான வரலாற்று சம்பவங்கள் வெகு அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன.

சிவாஜிகணேசன் வீரபாகு தேவராகவும், ஜெமினிகணேசன் சிவபெருமானாகவும், சாவித்ரி பார்வதியாகவும், சிவகுமார் முருகனாகவும், கே.ஆர்.விஜயா தெய்வானையாகவும், ஜெயலலிதா வள்ளியாகவும், அசோகன் சூரபத்மனாகவும், பேபி ஸ்ரீதேவி குழந்தை முருகனாகவும், கே.பி.சுந்தராம்பாள் ஒளவையாராகவும் நடித்து அசத்தியுள்ளனர்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பக்தி மணம் கமழச் செய்த படம். அன்றைய காலகட்டங்களில் கிராமங்கள் தோறும் திரையிடும் படமாக இது இருந்தது.

முருகன் அடிமை

Murugan adimai

1977ல் ஆர்.தியாகராஜன் இயக்கிய மாபெரும் வெற்றி படம். முத்துராமன், கே.ஆர்.விஜயா, ஏவிஎம்.ராஜன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.

கண்ணதாசன் பாடல்களை இயற்றியுள்ளார். கே.ஆர்.விஜயா வள்ளியாகவும், ஜெயா பார்வதியாகவும், ஏவிஎம் ராஜன் சிவனாகவும் நடித்துள்ளனர். ரோகினி ரகுவரன் சிறுவயது முருகராகவும், மாஸ்டர் ஸ்ரீதர் முருகனாகவும் நடித்துள்ளனர்.

திருவிளையாடல்

Thiruvilaiyadal

1965ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜிகணேசன், சாவித்ரி, நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். திருவிளையாடல் புராணம் நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் இந்தப்படத்தில் எடுத்துள்ளனர்.

சிவாஜிகணேசன் சிவனாகவும், சாவித்ரி பார்வதியாகவும், நாகேஷ் தருமியாகவும், முத்துராமன் செண்பக பாண்டிய மன்னனாகவும், கே.பி.சுந்தராம்பாள் ஒளவையாராகவும், ஏ.பி.நாகராஜன் நக்கீரராகவும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் முருகப்பெருமானின் பெயர் சொல்லும் பாடலான பழம் நீயப்பா...ஞானப்பழம் நீயப்பா...தமிழ் ஞானப்பழம் நீயப்பா என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. கே.பி.சுந்தராம்பாள் வெகு அழகாகப் பாடி அசத்தியுள்ளார்.

ஒன்றானவன் உருவில் என்ற பாடலையும், வாசி வாசி என்ற பாடலையும் அவரே பாடியுள்ளார். அப்போது இந்தப்படம் மாபெரும் வெற்றிபடமாக அமைந்து வெள்ளிவிழா கண்டது.

தெய்வம்

1972ல் எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்தி படம். கிருபானந்த வாரியார் நடித்த அற்புதமான படம். அவர் கதையைச் சொல்ல சொல்ல படம் நமக்குக் காட்டப்படுகிறது. ஜெமினிகணேசன், சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர்.

குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ள படம். இந்தப்படத்தில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் ஹிட். மருதமலை மாமணியே முருகையா..., திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் ஆகிய பாடல்கள் முருகனின் அருமைகளை சொல்லும் விதத்தில் உள்ளன.

படம் முழுவதும் முருகனின் அறுபடை வீடுகளில் நடந்த அற்புதங்களைப் பற்றி வெகு அழகாக எடுத்துக் காட்டுகிறது. தாய்க்குலங்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றப் படம்.

திருவருள்

Thiruvarul

1975ல் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளியான படம். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ளார். முருகனின் தீவிர பக்தரான சின்னப்பா தேவர் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். ஏவிஎம்.ராஜன், ஜெயா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதே போல துணைவன், வேலும் மயிலும் துணை ஆகிய முருகரின் பக்திப்படங்களும் தமிழ்த்திரை உலகில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story