இளையராஜா இசையில் எஸ்.பி.பி. உச்சம் தொட்ட பாடல்... 80ஸ் குட்டீஸ்களை ஏங்க வைத்த வைரமுத்து!
ஸ்ரீதரின் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் நினைவெல்லாம் நித்யா. கவிப்பேரரசு வைரமுத்து தான் இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதினார். அதில் ஒரு சூப்பர்ஹிட் பாடல் பனிவிழும் மலர்வனம் பாடல். இது ஒரு அருமையான பாடல்.
இந்தப் பாடல் காட்சிப்படுத்திய விதம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். பாடல் முழுவதும் கதாநாயகனும், கதாநாயகியும் உடற்பயிற்சி செய்தது போல இருக்கும். இந்த ஒரு பாட்டு மட்டும் எழுத வைரமுத்து வரவழைக்கப்படுகிறார். இந்தப்பாடலைப் பார்த்ததும் எல்லாப் பாடல்களையுமே அவரை வைத்து எழுதச் செய்கிறார் இயக்குனர் ஸ்ரீதர். இந்தப் பாடலை சலானட்டை என்ற ராகத்தில் இளையராஜா பண்ணியிருப்பார். ஆரம்பத்தில் சின்ன கிட்டார், வயலின், சிந்தசிஸ் என்ற கருவிகளால் அருமையாக இசை அமைத்திருப்பார்.
இடையில் புல்லாங்குழலில் ரெண்டு மூணு வகை வரும். கிட்டாரும், சிந்தசைஸ் வயலினும் கலந்து கலந்து ஆலாபனை செய்வது அருமையான ரசனையைத் தரும். இந்தப் பாடல் வெஸ்டர்ன் என்றால் வெஸ்டர்ன். கர்நாடிக் என்றால் கர்நாடிக். அப்படி ஒரு அற்புதமான பாடல். பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் இவ்வளவு தான் பல்லவி. இந்தப் பாடலில் ஒரு பெண்ணை முழுக்க முழுக்க ஒரு மலர்வனமாக உருவகப்படுத்தியிருப்பார்.
முதல் சரணத்தில் சேலை மூடும் இளஞ்சோலை, மாலை சூடும் மலர் மாலை என வரிகள் போட்டு இருப்பார். 20 நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும். இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும். கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்... எவ்வளவு அழகான வரிகள் என்று பாருங்கள்.
காமன் கோவில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம், தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே, வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே, ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி... இந்த வரிகளுக்கு விளக்கமே தேவையில்லை. இப்படி ஒரு பாடல் இனி வராதா என நம்மை ஏங்க வைக்கிறது. இந்தப் பாடலில் காலை எழுந்தால் பரிகாசம் என்ற இடத்தில் எஸ்பிபி சிரிப்பது தான் இந்தப் பாடலின் உச்சம். அது ஒரு பரிகாச சிரிப்பு. அவ்வளவு அழகான பாடலை எப்போது கேட்டாலும் சுகமே.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.