சினிமாவில் களைகட்டிய அரசியல் படங்கள் - ஒரு பார்வை

iruvar
மக்களுக்காகத் தான் அரசியல். மக்களைக் காப்பதற்குத் தான் அரசியல். ஆனால் ஓட்டு கேட்பதற்கு மட்டுமே மக்களிடம் அரசியல்வாதிகள் ஓடி வருகிறார்கள்.
வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை. இதைப் பார்க்கும் போது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.
சூரியன் படத்தில் கவுண்டமணி அரசியல்வாதியைப் போல் பில்டப் செய்து போனில் பேசிக்கொண்டு இருப்பார். பேசி முடித்ததும் அருகில் இருப்வர் போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது என்பார். அரசயில்ல இதெல்லாம் சாதாரணமப்பா என கெத்தாக சிரித்துக்கொண்டே சொல்வார் கவுண்டமணி. இதில் இடம்பெறும் இந்த டயலாக் அப்போது ட்ரெண்டாகி வந்தது. இது இக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.
ஓட்டுக்குத் துட்டு என்ற கலாச்சாரம் பரவி வரும் வேளையில் சினிமாவும் தன் பங்கிற்கு அவ்வப்போது அரசியலைத் தோலுரித்துக் காட்டி வருகிறது. அவற்றில் ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு...
மக்களாட்சி
இந்தப்படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. மம்முட்டி கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். இந்தப்படத்திலும் அரசியலை அழகாகக் கையாண்டுள்ளனர்.
உடன் நடித்து இருப்பவர் ரோஜா. இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சீன் பரபரப்பாகப் பேசப்பட்டது. ரஞ்சிதா, ஐஸ்வர்யா, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் பின்னணி இசை சூப்பர்.
இருவர்

iruvar Prakashraj and Mohanlal
1997ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் மணிரத்னம். மோகன்லால், பிரகாஷ்ராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் எம்ஜிஆர், கருணாநிதி கால அரசியலை நினைவூட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த துணை நடிகருக்கான விருதை பிரகாஷ் ராஜூம், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை சந்தோஷ்சிவனும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்

arasiyal
படத்தின் பெயரே அரசியல். 1997ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. லியாகத் அலிகான் வசனம் எழுதியுள்ளார். இவர் கேப்டன் விஜயகாந்த் படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். மம்முட்டி, ஷில்பா சிரோத்கர், ரோஜா, மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், சரண்ராஜ், ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். அரசியலில் நடக்கும் கூத்துகளை இந்தப்படம் நம் கண் முன்னே நிறுத்துகிறது. மம்முட்டியின் தேர்ந்த நடிப்பையும் அவரது அழகான பேச்சையும் நாம் கண்டு ரசிக்கலாம்.
இந்தப்படத்தில் அனிதா குப்புசாமியும், புஷ்பவனம் குப்புசாமியும் இணைந்து அரசியல் அரசியல் என்ற பாடலைப் பாடியுள்ளனர். ஹலோ நந்தலாலா, சிந்துபதி உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சகுனி
2012ல் வெளியான இந்தப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார். கார்த்தி, பிரணிதா சுபாஷ், சந்தானம், பிரகாஷ் ராஜ், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளர்.
இது ஒரு அரசியல் சார்ந்த கதை அம்சம் கொண்ட படம். அரசியல்வாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதை படம் தோலுரித்துக் காட்டுகிறது. இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
அமைதிப்படை

Amaithipadai sathyaraj
1994ல் வெளியான சத்யராஜின் அதிரடி கலக்கல் காமெடி படம். உடன் இணைந்து காமெடிக்கு மெருகூட்டியவர் மணிவண்ணன். படத்தின் இயக்குனரும் இவர் தான். இளையராஜா இசை அமைத்துள்ளார். சத்யராஜ், மணிவண்ணன் காம்பினேஷன் என்றால் அவர்கள் பண்ணும் லொள்ளுவுக்கு அளவே கிடையாது என்பார்கள்.
அந்த வகையில் இந்தப்படத்தில் அரசியலும் சேர்ந்து வருவதால் காட்சிக்கு காட்சி காமெடி அள்ளுகிறது. ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா, மலேசியாவாசுதேவன், சி.ஆர்.சரஸ்வதி, மீசை முருகேசன், எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர்.