17 மொழிகள், 48 ஆயிரம் பாடல்கள்...இன்றும் தளராத பலகுரல் பாடகியின் ஆச்சரிய சாதனைகள்...!!!

by sankaran v |
17 மொழிகள், 48 ஆயிரம் பாடல்கள்...இன்றும் தளராத பலகுரல் பாடகியின் ஆச்சரிய சாதனைகள்...!!!
X

S.Janaki

அன்னக்கிளி படத்தில் மச்சானைப் பார்த்தீங்களா பாடல் ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதே போல் தளபதி படத்தில் சின்னத்தாயவள் தந்த ராசாவே என்ற மெலடி பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த மந்திரக்குரலுக்குச் சொந்தக்காரி தான் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

பாடகி ஜானகியின் இயற்பெயர் சிஸ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி. ஏப்.23, 1938. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள குண்டூரில் பிறந்தார். இவரது கணவரின் பெயர் ராம்பிரசாத். 1959ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1997ல் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா. இவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். 1957ல் வெளியான விதியின் விளையாட்டு படத்தில் தான் பின்னணிப் பாடகியாக ஜானகி அறிமுகமானார். 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை 17 மொழிகளில் பாடியுள்ளார்.

Singer Janaki

கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஒரியா, பெங்காலி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, கொங்கானி ஆகிய இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், ஜப்பான், லத்தின், அரபி, ஜெர்மன், சிங்களா, பிங்கலா, பங்களா, ருஷ்யன், சைனீஷ் ஆகிய பிற நாட்டு மொழிகளிலும் பாடி அசத்தியுள்ளார். கன்னட மொழிகளில் தான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார்.

3 வயதிலேயே இசை கற்க ஆரம்பித்து 10 வயது வரை கற்றார். ஏவிஎம் ஸ்டூடியோவில் குழுபாடகியாகப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. கண்டசாலாவுடன் இணைந்து தெலுங்கு பாடலைப் பாடியுள்ளார்.

77வயதிலும் குரல் நடுக்கம் இல்லாமல் பாடி அசத்தி வருகிறார். 1958ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் வெளியான சிங்கார வேலனே தேவா என்ற பாடல் தான் இவருக்கு தமிழில் வெளியான முதல் பாடல். பி.சுசீலா, பி.லீலா இவர்களால் சரிவர பாட முடியாமல் போன இந்தப்பாடலை தனது காந்தக்குரலால் சரியாகப் பாடி அசத்தினார்.

இருந்தாலும் தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மலையாளம், கன்னடப்படங்களில் அதிக வாய்ப்பு கிடைத்தது.

Singer S.Janaki

ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி, தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே, பாடாத பாட்டெல்லாம், அழகும் மலருக்கும், சித்திரமே சொல்லடி, ராதைக்கேற்ற கண்ணனோ, உலகம் உலவும், காற்றுக்கென்ன வேலி, மலரே குறிஞ்சி மலரே என பல சூப்பர்ஹிட் பாடல்களைத் தனது காந்தக்குரலால்...காலத்தால் அழியாத காவியப்பாடல்களாக மாற்றிக்காட்டினார்.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு தான் ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வு, தனிப்பட்ட பயிற்சியின் காரணமாக எந்த மொழியானாலும் அதை உள்வாங்கி அதற்கே உரிய வட்டார உணர்வுடன் பாடி அசத்தினார். இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக விளங்கினார்.

தென்னிந்திய மொழிகளில் பாடும் பாடகிகளில் எஸ்.ஜானகி தான் முதன்மையான உணர்ச்சித்திறன் வெளிப்பாட்டைக் கொண்டு பாடினார். எல்லா தரப்பு மக்களையும் இளையராஜாவின் இசை கவர்ந்தது. நாட்டார் இசையைத் திரை இசையாக மாற்றிய மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் இளையராஜா. கிராமியப்பாடலுக்கும் மேற்கத்திய இசையை வெளிப்படுத்தினார். அதே போல் ஒரு நகரப்பாடலிலும் கிராமிய இசையைக் கொண்டு வந்தார்.

இன்று வரை இசைஞானி இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால் நிறைய பேர் இருந்தாலும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியே பெரும்பங்கு வகித்தார். இளையராஜாவின் மாறுபட்ட இசைக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி. அதனால் தான் அவரது திறமைக்கேற்ப ஜானகிக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்தார்.

கிராமியப்பாடலாக இருந்தாலும், கர்நாடக சங்கீதப் பாடலாக இருந்தாலும் இளையராஜாவின் எதிர்பார்ப்பை விட ஒரு மடங்கு அதிகமாகவே ஜானகி பாடிக்காட்டி அசத்தினார். சிக்கலான மெட்டுக்களையும் எளிதாகப் பாடுவார். திரையில் யார் பாடுகிறாரோ அவருக்குப் பொருத்தமான உணர்ச்சிகளைப் பாடலில் கொட்டி விடுவார் ஜானகி.

S.Janaki, Ilaiyaraja

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் மச்சானைப் பார்த்தீங்களா, அன்னக்கிளி உன்னைத் தேடுதே ஆகிய இரு பாடலையும் எஸ்.ஜானகி தான் பாடி அசத்தினார். இளையராஜாவின் இசையில் அதிகளவில் பெண் குரல் என்றால் அது எஸ்.ஜானகியாகத்தான் இருக்கும். இளையராஜாவின் சொந்தக்குரல் பாடல் என்றால் அதில் முதன்மைத் தேர்வு இவர் தான். குழந்தை, சிறுவர் சிறுமி, ஆணின் குரல், கிழவியின் குரல் என்று இவர் மாறுபட்ட குரல்களில் பாடி அசத்தினார்.

தற்போது இவரது வயது 82. இவர் இறந்துவிட்டார் என அடிக்கடி வதந்தி பரவுவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் உடல்நலம் காரணமாக மருத்துவமனையில் இருந்த இவரைப் பற்றி வதந்தி வந்தது. அப்போது நான் மரணிப்பது இது ஆறாவது முறை என பேசி வேடிக்கைக் காட்டினார்.

Next Story