இப்படி கூட மியூசிக் பண்ணலாமா!.. புதுமையாக யோசித்த இளையராஜா!.. காதலின் உணர்வை தந்த இன்னிசை..!
காலைப்பனியை நாம் இந்த நாள்களில் அதிகாலையில் எழும்போதுதான் அந்த அற்புதமான தருணத்தை உணர்ந்து ரசிக்க முடியும். மலர்கள், செடிகளின் இலைகளில் இந்தப் பனி தரும் முத்தத்தை நாம் பகலவன் வருவதற்குள் ரசித்தால் தான் உண்டு. அப்படிப்பட்ட இனிய உணர்வுகளுடன் கூடியது தான் இந்தப் படம். பெயர் நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இயக்குனர் மகேந்திரனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த வெற்றிப்படைப்பு. மோகன், பிரதாப் போத்தன், சுகாசினி உள்பட பலர் நடித்து அசத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு வெஸ்டர்ன் மியூசிக் போட்டு அசத்தியிருப்பவர் இசைஞானி இளையராஜா.
நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாக்கிங் செய்கிறாள் நாயகி. அவருக்கு வழித்துணையாக வருகிறான் நாயகன். அப்போது இளையராஜா தன் பங்கிற்கு அந்தப் பெண்ணுக்குத் துணையாக இசையையும் சேர்த்து விடுகிறார். அதுதான் பருவமே....புதிய பாடல் பாடு...என்ற மெலடி. காலடிச் சத்தங்களே பாடலுக்குத் தாளங்கள்.
இந்தப் பாடலுக்கு காலடிச் சத்தங்களை எப்படி உருவாக்குவது என்று இளையராஜா ரொம்பவே யோசித்தார். கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டச் செய்து அதன் மூலம் வந்த ஒலியைப் பதிவு செய்தார். அதுவே பாடலுக்குக் காலடிச் சத்தமானது.
கிராமம், நகரம் என இரு வேறுபட்ட சூழ்நிலைகளுக்குரிய இசையை இளையராஜா துல்லியமாகக் கொடுப்பார். பாடலில் காண்பிக்கப்படும் காட்சிகளுக்கு ஏற்ப இசையும் மாறி மாறி வருவது நமக்குள் ஒரு புத்துணர்வை எழச் செய்யும்.
இந்தப் பாடலை இன்னும் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் நமக்கு இது தெரியும். அதாவது காலடிச் சத்தத்தால் பூவின் மீது உட்கார்ந்து இருக்கும் பட்டாம்பூச்சி சிறகை விரித்து படபடவென பறந்து செல்லும். அப்படி ஒரு இசையின் அனுபவத்தை இளையராஜா நமக்கு கிட்டாரின் இசையால் உணர்த்தி விடுகிறார்.
அடுத்து அதிகாலைப் பனியின் குளிரில் காற்று நம்மைத் தழுவுவதைப் போன்ற இசை வரும். அது எங்கிருந்து என்றால் வயலினில் என்பது தெரிய வரும். அப்படி ஒரு மெல்லிசையை இளையராஜா நமக்காகத் தந்து இருப்பார். எஸ்.பி.பி.-ஜானகியின் குரல் பாடலுக்குக் கூடுதல் பலம்.
பொதுவாகக் காதல் என்றாலே அது விவரிக்க முடியாத ஒரு புதையல். அள்ள அள்ள நமக்குள் உற்சாகம் பீறிட்டு எழும். அந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர நுட்பமான பார்வை தேவை. அதைப் பூர்த்தி செய்யும் ஒரு பாடல் இந்தப் படத்தில் உள்ளது. அதுதான் உறவெனும் புதிய வானில் என்ற பாடல். கேட்டு ரசியுங்கள்.
மொத்தத்தில் ஒரு புதிய விஷயத்தை நாம் அணுகினால் ஒருவித மர்மமான உலகில் நாம் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். கனவிலும்...நினைவிலும் புது சுகம் என்று தொடங்கும் அந்தப் பாடலைப் பாடியவர் ஜானகி.
இந்தப் பாடல் இளையராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல. அவரது கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என வெஸ்டர்ன் கருவிகளுக்கு அருமையான வேலையைக் கொடுத்திருப்பார்.
அதே போல திருமண உறவின் சிக்கலில் தவிக்கிறாள் நாயகி. அவருடைய மனப்பதிவு எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் வகையில் ஏ..தென்றலே என்ற பாடல் வருகிறது. பி.சுசீலாவின் இனிய குரலில் பாடல் இனிக்கிறது. மம்மி பேரு மாரி என்று ஒரு பாடல் வருகிறது. டீன்ஏஜ் பையன் பர்டுவதாக உள்ள இந்தப் பாடலைப் பாடியவரோ எஸ்.ஜானகி.
பாடல்களுக்காகவே இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளைஞர்களுக்கும், காதலர்களுக்கும் இந்தப் படம் செம விருந்து.
1980ல் வெளியான இந்தப் படத்தில் 3 பாடல்களைக் கங்கை அமரன் எழுதியுள்ளார். பருவமே பாடலை மட்டும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார்.