50 வருடங்களுக்கு முன்பு வெளியான தீபாவளி படங்கள் - ஒரு பார்வை
ஆண்டுதோறும் தீபாவளிப் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும். இந்த ஆண்டில் 5 படங்கள் வருகிறது. நாம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி பயணிப்போம்.
அந்தக் காலத்திலும் என்னென்ன சுவாரசியமான படங்கள் வந்தன என தெரிந்து கொள்ள வேண்டாமா....வாங்க பார்க்கலாம்.
உயிரா மானமா (1968)
உயிரா மானமா என்ற படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். ஜெய்சங்கர், விஜய நிர்மலா, முத்துராமன், நாகேஷ், கிருஷ்ணகுமாரி, சரோஜா தேவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. கோடியில் இரண்டு, குற்றால மலையிலே, சவாலே சமாளி, ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் ஆகிய பாடல்கள் உள்ளன. படம் வெளியான தேதி 21.10.1968.
சிவந்த மண் (1969)
சி.வி.ஸ்ரீதரின் இயக்கத்தில் 9.11.1969ல் தீபாவளி விருந்தாக வெளியான படம் சிவந்த மண். சிவாஜிகணேசன், காஞ்சனா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
முத்துராமன், நம்பியார், ரங்கராவ், ஜாவர் சீத்தாராமன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.வி.யின் இசையில் ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரம் எப்போ, பட்டத்து ராணி, பறவை யுவராணி, சொல்லவோ சுகமான, ஆனந்தமாக, அம்மா உன் மகனோடு, தங்கமணி பைங்கிளியும் ஆகிய பாடல்கள் உள்ளன.
சொர்க்கம் (1970)
டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி 29.10.1970. தீபாவளி விருந்தாக வெளியான இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, கே.பாலாஜி, முத்துராமன், மனோகர், வாசு, நாகேஷ், வி.நாகையா உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் சுகமானவை. பொன்மகள் வந்தாள், அழகு முகம், சொல்லாதே யாரும் கேட்டால், ஒரு முத்தாரத்தில், நாலு காலு சார் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் இடம்பெற்ற பொன்மகள் வந்தாள் என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிதாமகன் படத்திலும், அழகிய தமிழ் மகன் படத்திலும் இடம்பெற்றன.
நீரும் நெருப்பும் (1971)
1971ல் தீபாவளி திரை விருந்தாக வெளியானது. ப.நீலகண்டன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்து அசத்திய படம். மணிவண்ணன் மற்றும் கரிகாலன் என்ற கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருந்தார்.
இந்தப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான தேதி 18.10.1971.
தெய்வம் (1972)
எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, ஏவிஎம்.ராஜன், மேஜர் சுந்தரராஜன், அசோகன், ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீகாந்த், நாகேஷ், செந்தாமரை என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்துள்ளார். 1972 தீபாவளி விருந்தாக இந்தப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. இந்தப்படத்தில் ஜெமினிகணேசன் ஆறுமுகமாகவும், கே.ஆர்.விஜயா வள்ளியம்மையாகவும் நடித்து அசத்தினார்கள். சிவகுமார் சுப்பிரமணியமாகவும், ஜெயா தெய்வானையாகவும் நடித்து இருந்தனர்.
மருதமலை மாமணியே, நாடறியும் 100 மலை நான் அறிவேன், வருவான்டி தருவான்டி மலையாண்டி, திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன், குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம், திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற காலத்தால் அழியாத இனிய பக்தி பாடல்கள் நிறைந்த படம்.
சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எம்.ஆர்.விஜயா பாடிய வருவான்டி தருவான்டி மலையாண்டி பாடல் இனிமையானது. அதே போல டிஎம்எஸ் உடன் சீர்காழி கோவிந்தரராஜன் பாடிய திருச்செந்தூரின் கடலோரத்தில் பாடல் ரசனை ததும்பும் வகையில் இருந்தது. படம் வெளியான தேதி 04.11.1972.