எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் தமிழ்ப்படங்கள் - ஒரு பார்வை
தமிழ்சினிமாவில் எதிர்பாராத விதமாக சில படங்கள் வெற்றி பெறுவதுண்டு. சில படங்கள் ரொம்பவே எதிர்பார்த்துத் தோல்வி அடைவதும் உண்டு. நாம் எப்போதும் நல்லதையே நினைப்போம். அந்த வகையில் நாம் இப்போது எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்ற படங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
16 வயதினிலே
1977 ஆங்கிலப்புத்தாண்டு அன்று இந்தப்படம் வெளியாகியுள்ளது. எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியானது. இந்தப்படத்தில் கமல், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படம் பிரமாண்டமான வெற்றியைப் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படம் வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது. இளையராஜாவின் பின்னணி இசை படத்தில் மிளிர்ந்தது. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, சோளம் விதைக்கயில, மஞ்சக்குளிச்சு, செந்தூரப்பூவே, செவ்வந்தி பூவெடுத்த ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
ஒரு தலை ராகம்
1980ல் வெளியான இப்படத்தின் கதையை எழுதியவர் டி.ராஜேந்தர். இயக்கியவர் ஈ.எம்.இப்ராகிம். இவரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். சங்கர், ரூபா, சந்திரசேகர், உஷா ராஜேந்தர், ரவீந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தைப் பெரும்பாலோனோர் இது டி.ராஜேந்தர் படம் என்று நினைப்பார்கள். ஆனால், அது இல்லை. ஏனென்றால் அவர் படங்கள் என்றாலே 9 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்கும்.
அதுதான் அவரது அக்மார்க் முத்திரை. அப்படி இருக்கையில் இந்தப்படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்குக் காரணம் டி.ராஜேந்தரின் வலுவான கதை தான். கல்லூரி காளையர்களையும், கன்னிகளையும் அந்தக்காலத்தில் சுண்டி இழுத்து படம்பார்க்க திரையரங்கிற்கு வரவழைத்தது.
இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் டி.ராஜேந்தர். பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. என் கதை, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும், கூடையிலே கருவாடு, மன்மதன், நான் ஒரு ராசியில்லா ராஜா, வாசமில்லா மலர் இது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆண்பாவம்
1985ல் வெளியான இந்தப்படத்தில் நடித்து இயக்கியவர் பாண்டியராஜன். அவருடன் இணைந்து பாண்டியன், ரேவதி, சீதா, பார்த்திபன், வி.கே.ராமசாமி, ஜனகராஜ், உசிலை மணி, ஓமக்குச்சி நரசிம்மன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு பிரமாதமான நகைச்சுவை படம். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. பாண்டியராஜனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த படங்களில் இது முதலிடம் பெற்றது. என்ன பாடாய், இந்திரன் வந்தாலும், காதல் கசக்குதய்யா, குயிலே குயிலே பூங்குயிலே, ஊட்டி வந்த சிங்கக்குட்டி ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
கரகாட்டக்காரன்
1989ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கங்கை அமரன். இசை அமைத்தவர் அவரது அண்ணன் இளையராஜா. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை உடன் நம் பாரம்பரிய நடனமான கரகாட்டத்தையும் இணைத்து சுவைபட எடுத்துக்கூறிய இந்தப்படம் யாரும் எதிர்பாராத வேளையில் சக்கை போடு போட்டு வேற லெவலில் வெற்றி பெற்றது.
இந்த மான் உந்தன், குடகுமலைக்காற்றிலே, மாங்குயிலே, பூங்குயிலே, மாரியம்மா...மாரியம்மா, முந்தி முந்தி விநாயகரே, நந்தவனத்தில் ஒரு, ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னான் ஆகிய மெகாஹிட் பாடல்கள் உள்ளன.
திருடா திருடி
2003ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் சுப்பிரமணியம் சிவா. இவர் தான் கதை எழுதியுள்ளார்.
தீனாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அதிரடி. தனுஷ், சாயாசிங், கருணாஸ், மாணிக்கவிநாயகம், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் செம ஹிட் ஆனது. ஆயுர்வேத அழகி நீ, அழகா இருக்காங்க, மன்மத ராசா, முத்தம் முத்தம், உன்ன பார்த்த, வண்டார் குழலி ஆகிய பாடல்கள் உள்ளன.