சூப்பர் ஸ்டார் ரஜினி… ரசிகர்களின் ஃபேவரைட் டைட்டில் கார்டு உருவானது இப்படித்தான்..
ரஜினிகாந்த் என்றாலே நமக்கு நியாபகம் வருவது “மாஸ்” என்ற சொல்தான். அந்த அளவுக்கு கடல் பரப்பிலான ரசிகர் கூட்டத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு உச்ச நடசத்திரம் அவர்.
சாதாரண பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கி சூப்பர் ஸ்டாராக தற்போது உயர்ந்திருக்கிறார் என்றால் நம் கண்முன்னே நிகழ்ந்த அதிசயம் என்றுதான் கூறவேண்டும். உழைப்பும், திறமையும், தீவிரமும் இருந்தால் நாம் வெற்றியின் உச்சத்தை அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். அதன் பின்புதான் தனியாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த “பைரவி” திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட கட் அவுட்களில்தான் முதன்முதலாக “சூப்பர் ஸ்டார்” என்ற டைட்டில் எழுதப்பட்டது.
எனினும் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் முதன்முதலாக திரையில் தோன்றியது “நான் போட்ட சவால்” என்ற திரைப்படத்தில்தான். இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது.
சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே நமக்கு நியாபகம் வருவது “அண்ணாமலை” திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட டைட்டில் கார்டுதான். நீல நிற பல்புகள் வரிசையாக எரிவது போல் “சூப்பர் ஸ்டார்” என்று தென்படும் அந்த டைட்டில்தான் இப்போதுவரை ரசிகர்களின் ஃபேவரைட் டைட்டில் கார்டாக இருக்கிறது.
இந்த நிலையில் “சூப்பர் ஸ்டார்” என்ற டைட்டில் கார்டு உருவான விதம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் “அண்ணாமலை” திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
“ஜேம்ஸ் பாண்ட் படங்களை போல் ரஜினிகாந்த்திற்கும் ஒரு சிக்னேச்சர் டைட்டில் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். இதனை நான் ரஜினிகாந்த்திடம் கூறினேன். ஆனால் அவர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் எனது வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்கொண்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த டைட்டிலுக்காக மெனக்கெட்டோம். அதன்பின் இசையமைப்பாளர் தேவாவிடம் தனியாக இதற்கொரு பின்னணி இசையை உருவாக்கச் சொன்னோம். இப்படித்தான் இந்த டைட்டில் கார்டு உருவானது” என சுரேஷ் கிருஷ்ணா அப்பேட்டியில் கூறியுள்ளார். இன்றுவரை இந்த டைட்டில் கார்டும் தேவாவின் மாஸான பின்னணி இசையும், ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.