More
Categories: Cinema History Cinema News latest news

தான் நடித்த படத்தைப் பார்க்க டிக்கெட் கேட்ட ரஜினி…எரிந்து விழுந்த மேனேஜர்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். இந்தப் படத்தின்போது அவருடைய ரூம் மெட்டாக இருந்தவர் நண்பர் ஞானம். அவர் ரஜினியின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தைப் பகிர்கிறார்.

அபூர்வ ராகங்கள் படம் வெளியான நாள். தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் படம் ரிலீஸ். முதல் காட்சியைப் பார்க்க நானும் ரஜினியும் ஆவலோடு போனோம். அந்தப்படம் தான் ரஜினியின் முதல் படம். அவர் திரையில் தோன்றியதும் ரசிகர்கள் எப்படி பார்த்து ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க ரொம்ப ஆவலோடு இருந்தார் ரஜினி.

Advertising
Advertising

Kamal, Rajni in Apoorva ragangal

தியேட்டர் வாசலில் நின்ற காவலாளியிடம் ரஜினி கேட்டார். மேனேஜர் ரூம் எது? நெற்றியில் வந்து விழுந்த தலைமுடியை அசால்டாகக் கோதி விட்டு கம்பீரமாகக் கேட்டார் ரஜினி. அந்தக் காவலாளி ரஜினியை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு அதோ இருக்கு சார் என்று அறையைக் காட்டினார்.

ரஜினி என்னையும் அழைத்துக் கொண்டு அங்கு போனார். அங்கே நின்று கொண்டு இருந்தவர்கள் நாமும் இதே போல மேனேஜர் அறையைக் கேட்டு போயிருக்கலாமே என்று நினைத்தனர்.

சார்…மேனேஜர் அறையில் நுழைந்த ரஜினி மெல்ல அழைத்தார்.

என்ன விஷயம் என்று மேனேஜர் கேட்டார். நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். உங்க தியேட்டர்ல படம் பார்க்கணும்னு ஆசை. எனக்கு 2 டிக்கெட் வேணும் என்று ரஜினி ஆர்வத்தோடு கேட்டார்.

Apoorva ragangal 1

சரிதான்..போங்க சார்..! உங்களுக்கு எப்படியாவது படம் பார்க்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் சொல்வீங்க..டிக்கெட் வேணும்னா கியூல போயி நில்லுங்க. அதுக்குப் போயி பொய் சொல்லிட்டு வராதீங்க..என்று கடுப்புடன் சொன்னார் மேனேஜர்.

பொய்யில்லை. உண்மையிலேயே நான் நடிச்சிருக்கேன் சார். ரெண்டு டிக்கெட் கொடுங்க என மீண்டும் கேட்டார் கெஞ்சாத குறையாக ரஜினி.

உங்களை மாதிரி எத்தனையோ பேரை பார்த்தாச்சு…ஒரு தடவை சொன்னா கேளுங்க…எனக்கு நிறைய வேலை இருக்கு…என விரட்டாத குறையாகச் சொன்னார் மேனேஜர்.

நம்பிக்கையோடு சென்ற ரஜினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விருட்டென தன்னோட மின்னல் வேக நடைபோட்டு வெளியே சென்றார் ரஜினி. பிரபல இயக்குனர் படம் என்பதால் கூட்டம் அள்ளியது. எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என துடித்தார் ரஜினி.

Apoorva ragangal

எனக்கு முன்னால் ஓடிப் போய் எப்படியோ 2 டிக்கெட் வாங்கி விட்டார். அவர் முகம் எல்லாம் பூரிப்பு. சட்டை எல்லாம் தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. தியேட்டரில் சென்று உட்கார்ந்தோம். படம் பார்த்தோம். அவர் வரும் காட்சியை ரசிகர்கள் பார்த்தார்கள். ரஜினியோ ரசிகர்களின் ரீ ஆக்ஷனையே கவனித்தார்.

யாரும் இவரைக் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியில் வந்து தியேட்டர் வாசலில் நின்றார். ஒருவரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அப்போது ஒரு பெண் குரல்…சார்…நீங்க தானே இந்தப்படத்தில் நடிச்சிருக்கீங்க என்றார்.

அவ்வளவு தான் பேசினாள். ரஜினி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப். அவர் கண்கள் மின்னின. ஆமாம் என்றார் புன்சிரிப்போடு. ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க…சார் என்றாள் அந்தப் பெண். ரஜினி தேங்க் யூ என்றார்.

Published by
sankaran v

Recent Posts